search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட ரோணி
    X
    கொலை செய்யப்பட்ட ரோணி

    திருப்பூரில் வடமாநில பனியன் தொழிலாளி குத்திக்கொலை

    திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்காள வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். #Murdercase

    திருப்பூர்:

    திருப்பூர் வஞ்சிப்பாளையம் கணியாம்பூண்டி பிரிவு பகுதியில் பனியன் கம்பெனி உள்ளது. இங்கு மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த எம்.டி. ரோணி (33) என்பவர் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

    இவருடன் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சில வாலிபர்களும் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு ரோணி அப்பகுதியில் மார்பில் கூர்மையான கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    அவரை யாரோ கத்தியால் குத்தி கொன்றது தெரிய வந்தது. இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இணை கமி‌ஷனர் அண்ணாத்துரை, அனுப்பர் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் பிணமாக கிடந்த ரோணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் ரோணி பணத்துடன் வெளியே சென்ற போது அவரை யாராவது வழிமறித்து பணத்தை பறிக்கும் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தினர்.

    பின்னர் ரோணி வேலை பார்த்த பனியன் கம்பெனிக்கு சென்று விசாரித்தனர். அப்போது ரோணியுடன் தங்கி இருந்த நண்பர் ஒருவர் தலைமறைவானது தெரிய வந்தது.அவருக்கும் ரோணிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அவர் தான் ரோணியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வடமாநில பனியன் தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×