search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே 2 பெண்களிடம் நகை பறிப்பு
    X

    திருமங்கலம் அருகே 2 பெண்களிடம் நகை பறிப்பு

    திருமங்கலம் அருகே 2 பெண்களிடம் 17 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் பறித்துச் சென்றனர். #jewelrysnatch

    பேரையூர்:

    சமயநல்லூர் சத்திய மூர்த்தி நகர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 43). இவர், மனைவி ரேவதியுடன் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் சென்றார். பின்னர் அங்கிருந்து 2 பேரும் ஊருக்கு புறப்பட்டனர்.

    சமயநல்லூர் சாலையில் தனக்கன்குளம் பிரிவில் சென்றபோது, 2 மர்ம வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அதில் ஒருவன் ரேவதி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். அதிர்ச்சியடைந்த ரேவதி சுதாரிப்பதற்குள் 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர் கே.கே.ஜி. நகரைச் சேர்ந்தவர் டெல்லி ராஜன். இவரது மனைவி பத்மாவதி (58). நேற்று இவர் டி.தொட்டிய பட்டியில் உள்ள கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது ஒருவன் அவரது பின்னால் வந்து கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினான். திருடன்... திருடன்.... என பத்மாவதி கூச்சலிட அக்கம், பக்கத்தினர் திரண்டு திருடனை விரட்டினர்.

    சிறிது தூரத்தில் தயாராக மோட்டார் சைக்கிளில் நின்ற 2 பேர் நகை பறிப்பு திருடனை ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் காமராஜர் வடபகுதி ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா (44). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, புல்லமுத்தூர் பகுதியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்குச் சென்றார்.

    அங்கு தரிசனம் முடித்து வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 7 1/2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (41) என்பவரது வீட்டிலும் கதவை உடைத்து கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். அங்கிருந்து வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பதாக தெரிகிறது.

    கோவிலுக்கு சென்றுள்ள செல்லப்பாண்டி திரும்பினால் தான் திருட்டு போன பொருட்கள் பற்றிய விவரம் தெரியவரும்.

    இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×