search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரையூர் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகள் இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
    X

    பேரையூர் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகள் இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

    பேரையூர் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகள் இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். #Hospital

    பேரையூர்:

    திருமங்கலத்தை அடுத்த பேரையூரில் அரசு மருத்துவமனை தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிதாக ரூ.1½ கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டு பெரிய மருத்துவமனையாக உருப்பெற்றது. இந்த மருத்துவமனை 30 படுக்கை வசதி கொண்டது.

    பேரையூர் அரசு மருத்துவமனையை சுற்றி உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். பேரையூர், சாப்டூர், சுப்புலாபுரம், கல்லுப்பட்டி, வண்டபுலி, அணைக்கரைப்பட்டி, வண்டாரி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பேரையூர் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் வெளி நோயாளிகள் மட்டும் 700 பேர் வந்து செல்கின்றனர்.

    20 ஆண்டுகளுக்கு முன் இந்த மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்வு பெற்றது. இங்கு 7 மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 3 மருத்துவர்களே உள்ளனர். 4 டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளது.

    மருத்துவமனை சுத்தம் செய்ய நிரந்தர துப்புரவாளர்கள் இல்லை. நவீன மகப்பேறு அறுவை சிகிச்சை மையம் உள்ளது.

    ஆனால் குழந்தை நல மகப்பேறு டாக்டர்கள் சிசேரியன் செய்ய மருத்துவர்கள் இல்லை. அரசு மருத்துவமனைக்கு தனி ஆம்புலன்ஸ் வசதியும் கிடையாது. ஸ்கேன் பார்க்க வசதி இருந்தும் அதற்கான ஆட்கள் இல்லை. பல் மருத்துவர்கள் கிடையாது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பிணவறை இன்று வரை கிடையாது.

    திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதி கல்லுப்பட்டி, பேரையூர் பகுதியாகும். இதில் உயிரிழப்பு ஏற்பட்டால் பிரேத பரிசோதனை செய்வதற்கு திருமங்கலம் அல்லது உசிலம்பட்டிக்கு தான் செல்ல வேண்டும்.

    தனியார் ஆம்புலன்ஸ் மூலம் செல்வதால் அதிக செலவு ஏற்படுவதாக கூறுகின்றனர். இன்று வரை மார்ச்சுவரி கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மார்ச்சுவரி கட்டிடம் கட்டுவதற்கான இடம் இருந்தாலும் அங்கு கட்டிடம் கட்ட முன் வரவில்லை.

    மேலும் விபத்தில் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. விபத்து ஏற்பட்டால் எலும்பு முறிவு தான் ஏற்படும் அதற்கான மருத்துவர்களும் இங்கு கிடையாது.

    பேரையூர் அரசு மருத்துவமனை பெயரளவுக்குத்தான் உள்ளது. “இருக்கு ஆனால் இல்லை... இல்லை... ஆனால் இருக்கு” என்ற வசனம் தான் ஞாபகம் வருகிறது.

    முதலுதவிக்கு மட்டும் தான் பேரையூர் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இதுதொடர்பாக ஊர் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் உசிலம்பட்டி துணை இயக்குநரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மேலும் அவர்களிடம் கேட்டால் நாங்களும் பரிந்துரை செய்து கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

    அரசு மருத்துவமனை மேம்பட அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×