search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது அரசு விதிகளின் படி தவறு - துணை முதல்வர் பன்னீர்செல்வம்
    X

    வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது அரசு விதிகளின் படி தவறு - துணை முதல்வர் பன்னீர்செல்வம்

    வீடுகளில் பிரசவம் பார்ப்பது தவறு. அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். #HomeMaternity #OPanneerselvam
    தேனி:

    தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கண்ணன் (29). என்ஜினீயரிங் படித்து முடித்தவர். எலக்ட்ரிக்கல் வேலையை ஒப்பந்தம் எடுத்து செய்து கொடுத்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (25). எம்.பி.ஏ. பட்டதாரி.

    இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மகாலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் கணவன், மனைவி இருவரும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றே விரும்பினர். தொடர்ந்து மகாலட்சுமி, மருத்துவமனைக்கு செல்ல மறுத்தார்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் மகாலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கண்ணன் தனது வீட்டில் வைத்தே மகாலட்சுமிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இரவு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அவர் குழந்தையின் தொப்புள் கொடியுடன் இணைந்துள்ள நச்சுக் கொடியை அகற்றாமல் வைத்துள்ளதாக போலீசாருக்கும், மருத்துவத்துறைக்கும் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து 2 ஆம்புலன்சுகளுடன் மருத்துவத் துறையினர் அங்கு சென்று நச்சுக் கொடியை அகற்ற வேண்டும். குழந்தையின் உடல் நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    ஆனால் தம்பதியின் வேண்டுகோளின்படி, அரசு ஆரம்ப சுகாதாரநிலைய சித்த மருத்துவக் குழுவினர் அங்கு வந்து குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்து, நச்சுக் கொடியை பாதுகாப்பாக அகற்றினர்.

    இதையடுத்து தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் கூறியும் அந்த தம்பதியினர் ஏற்கவில்லை. இதனால் சுமார் 9 மணிநேரம் அங்கிருந்த மருத்துவ துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

    இதில், குழந்தைக்கு நச்சுக் கொடியை அகற்றி சிகிச்சை அளிப்பதற்காக சென்ற போது, கண்ணன் அவரது பெற்றோரான தனுஷ்கோடி, அழகம்மாள், ஆகியோர் மருத்துவ குழுவினரை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    அதன்பேரில் 3 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி வழக்குப்பதிவு செய்தார். இதில் கண்ணனின் தந்தை தனுஷ்கோடியை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு விதிகளின்படி மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க வேண்டும். சட்ட விதிகளை மீறி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறு.  இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். #HomeMaternity #OPanneerselvam
    Next Story
    ×