search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீமுஷ்ணம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    ஸ்ரீமுஷ்ணம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    ஸ்ரீமுஷ்ணம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். #Farmersstruggle

    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணத்தில் ஆண்டுதோறும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு ஸ்ரீமுஷ்ணம் கீழ் மற்றும் மேல்புளியங்குடி, ஸ்ரீராமன், ரெட்டிபாளையம், கரப்பை போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் நெல் கொள்முதல் செய்து பயன்பெற்று வந்தனர்.

    இந்த ஆண்டு நெல் கொள்முதல் தாமதமாக கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஓரிரு நாட்கள் மட்டும் திறந்து குறைந்த அளவே நெல் கொள்முதல் செய்தனர்.

    ஆனால், விவசாயிகள் அந்த நெல் கொள்முதல் நிலையம் முன்பு நெல்களை மூட்டைகளாகவும், குவியல் குவியலாகவும் வைத்தனர். நெல் மூட்டைகளை எடை போடுங்கள் என்றால், எடை மிஷின் சரியில்லை. நெல் நனைந்தால் எடைபோட முடியாது எனவும் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் தினமும் சரியான நேரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்தும், தற்போது இந்த கொள்முதல் நிலையம் தினமும் இரவு நேரத்தில் மழை பெய்வதால் உடனடியாக நெல் மூட்டைகளை எடை போட வேண்டும் என்று வலியுறுத்தி நெல் குவியல் முன்பு நின்று கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இது குறித்து நெல் கொள்முதல் நிலையத்துக்கு வந்த விவசாயிகள் கூறியதாவது:-

    கடந்த சனிக்கிழமை இந்த நிலையத்துக்கு எடைபோட செல் எடுத்து வந்தேன். இதுவரை எடை போடவில்லை. கடந்த ஆண்டு விருத்தாசலம் செல்லும் சாலையில் நெல் கொள்முதல் நிலையம் பரந்து விரிந்து பாதுகாப்பான இடத்தில் இருந்தது.

    இந்த ஆண்டு அரசு இடத்தில் மலைமேடு பகுதியில் பள்ளம்-மேடாக உள்ள இடத்தில் இந்த நிலையத்தை தொடங்கி உள்ளனர். அதனால் நெல் குவியலாக உள்ள இடத்தில் மழைநீர் தேங்கி குட்டைப்போல் காட்சி அளிக்கிறது.

    மேலும் இரவு நேரங்களில் பன்றிகள் புகுந்து குவித்து வைத்துள்ள நெல்களை தின்று சேதப்படுத்தி விடுகிறது. கடன் மற்றும் நகை பொருட்களை அடமானம் வைத்து பயிரிட்டு பின்பு அறுவடை செய்து அதில் பணத்தை பெற்று கடன்களை அடைக்கலாம் என்றால் வட்டி கூட கட்ட முடியாத நிலையில் உள்ளோம். எனவே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை காலதாமதம் இல்லாமல் திறந்து எங்கள் நெல் மூட்டைகளை எடைபோட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×