search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் களப்பணியாற்றிய ஏ.கே.போஸ்
    X

    எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் களப்பணியாற்றிய ஏ.கே.போஸ்

    மதுரையில் இன்று காலமான சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் களப்பணியாற்றியவர் ஆவார். #ADMK #AKBose #MLABose #RIP
    சென்னை:

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (வயது 69) மாரடைப்பால் உயிரிழந்தார். மதுரை ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகரில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

    மதுரையில் ஜீவா நகரில் வசித்து வந்த ஏ.கே. போஸ் டிராவல்ஸ் அதிபர். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்தாலும் பரபரப்பான அரசியல்வாதியில்லை என்பதால் பலருக்கும் இவரைப் பற்றி தெரியாது.

    ஏ.கே. போஸ் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1993ம் ஆண்டு எம்.ஏ அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இவரது தந்தை பெயர் கருப்பத்தேவர். இவரது மனைவி பெயர் பாக்யலட்சுமி.

    டிராவல்ஸ் அதிபரான போஸ் கடந்த 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2006ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். 2007ம் ஆண்டு சட்டசபையில் நடைபெற்ற அமளி துமளியில் தொப்பியை சபாநாயகர் மேஜை மீது வீசியதாக பத்து நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கட்சித்தலைவி ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தார்.
     
    2011ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கப்படவே, போஸ், மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறை எம்.எல்.ஏவானார். 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் வடக்குத் தொகுதியில் போட்டியிட மனு அளித்தார், கூடவே திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடவும் விரும்பினார். ஆனால் அவருக்கு ஜெயலலிதா வாய்ப்பு அளிக்கவில்லை.



    இந்த நிலையில் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஏ.கே.போஸ். எம்.எல்.ஏ. ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #AKBose #MLABose #RIP 
    Next Story
    ×