search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியமன எம்.எல்.ஏ.க்களை அரசு விழாக்களுக்கு அழைக்க தடை - சட்டசபை செயலகம் உத்தரவு
    X

    நியமன எம்.எல்.ஏ.க்களை அரசு விழாக்களுக்கு அழைக்க தடை - சட்டசபை செயலகம் உத்தரவு

    3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாது என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏனெனில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு பிறகே அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. #PuducherryAssembly #NominatedMLAs

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 எம்.எல்.ஏ.க்களை நியமித்தது.

    எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோருக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

    ஆனால், எம்.எல்.ஏ.க் களை சட்டசபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் தொடர்ந்து மறுத்து வந்தார். அதோடு எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்க கோரி காங்கிரஸ் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

    ஐகோர்ட்டு மத்திய அரசுக்கு புதுவை சட்ட சபைக்கு எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

    இதனால் தங்களை சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நியமன எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

    இதனிடையே சுப்ரீம் கோர்ட்டு, எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்காததால் அவர்களை சபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு கவர்னர் கிரண்பேடி நிதி மசோதாவுக்கு அனுமதி அளித்தார்.

    இதையடுத்து கடந்த 1-ந்தேதி கூடிய சட்டசபை கூட்டத்தில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். நிதிமசோதாவும் நிறைவேற்றப்பட்டது.


    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்தராமன் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சட்ட சபையில் வாக்களிக்க உரிமை இல்லை என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் வைத்திலிங்கம் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றினார்.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டின் எதிர்பார்ப்புக்கு இணங்கி 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் சபைக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், செப்டம்பர் 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்புக்கு பிறகு நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.

    இதன் மூலம் சபை நிகழ்வில் பங்கேற்க நியமன எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள், உரிமைகள் வழங்கப்படாது என்பது தெரிய வந்துள்ளது.

    வழக்கமாக நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி, அரசு விழாக்களுக்கு அழைப்பு, அரசின் நலத்திட்டங்களை பெற பரிந்துரைக்கும் உரிமை, சட்டசபையில் அறை ஒதுக்கீடு என தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க் களுக்கு உரிய அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.

    ஆனால், பா.ஜனதாவை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாது என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏனெனில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு பிறகே அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    இதனால் நியமன எம்.எல். ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்காது. அரசு விழாக்களுக்கு அழைப்பு அனுப்பப்படாது. மக்கள் நலத்திட்டங்களுக்கு பரிந்துரை செய்ய முடியாது என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சட்டசபை செயலகம் அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தலும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    Next Story
    ×