search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின், வைகோ வலியுறுத்தல்
    X

    ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின், வைகோ வலியுறுத்தல்

    சிலை கடத்தல் பற்றி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், வைகோ கூறியுள்ளனர். #Vaiko #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிலை திருட்டு வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க அரசு கொள்கை முடிவு எடுத்திருக்கிறது என்று அ.தி.மு.க. அரசு ஐகோர்ட்டு முன்பு தெரிவித்திருப்பது வியப்பளிக்கிறது. அதிலும் குறிப்பாக ஐகோர்ட்டின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வரும் ஒரு விசாரணையில் அ.தி.மு.க. அரசு இப்படியொரு திடீர் நிலைப்பாட்டை எடுத்திருப்பது உள்நோக்கம் நிறைந்ததாகவே தெரிகிறது.

    முதலில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுவை சிலை திருட்டு தடுப்புப் பிரிவிற்கு நியமிக்கவே தயங்கியது. விசாரணைக்குத் தேவையான எண்ணிக்கையில் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க மறுத்தது. வழக்கின் முக்கிய விவரங்களை ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுவிடம் கேட்டு டி.ஜி.பி.யே வற்புறுத்தினார். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் விசாரணை நடத்தும் ஐ.ஜி. மீதே குற்றம் சுமத்தும் சர்வ அதிகாரத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அ.தி.மு.க. அரசு அளித்து ஊக்கமளித்தது.

    ஐகோர்ட்டு உத்தரவுகளை மதிக்காதது ஏன்? என்று நான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, சிலை திருட்டுகளை கண்டுபிடிக்க அரசு போதிய ஆதரவு அளித்து வருகிறது. ஐகோர்ட்டு கூறியபடி அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் பதிலளித்தார்.

    அப்படி பதிலளித்த ஒரு மாதத்திற்குள் தற்போது திடீரென்று மனம் மாறி, சிலை திருட்டு விசாரணையில் அரசுக்கு திருப்தி இல்லை என்றும், ஒரு துறை (சிலை தடுப்புப் பிரிவு) இன்னொரு துறையை (அறநிலையத்துறை) காயப்படுத்துகிறது என்றும் தமிழக அரசின் சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குழப்பமயமான நிர்வாகத்திற்கு மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.

    சிலை திருட்டு வழக்குகளையும், எதிர்காலத்தில் வரும் இது போன்ற வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருப்பதைப் பார்த்தால் ஐகோர்ட்டு கண்காணிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக சிலை திருட்டு தடுப்புப் பிரிவையே கலைத்து விடுவதற்கு அ.தி.மு.க. அரசு தயாராகி வருவதுபோல் தெரிகிறது.

    சிலை திருட்டு வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி.க்கு முழு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்த அ.தி.மு.க. அரசு, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை, ஐ.ஜி. பொன் மாணிக்கவேலு தலைமையிலான சிலை திருட்டு தடுப்புப்பிரிவு கைது செய்தவுடன், அந்த ஐ.ஜி. மீதே நம்பிக்கையில்லை என்றும், ஒரு வருடமாக விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் ஐகோர்ட்டில் தெரிவித்து இருக்கிறது.

    இந்த வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுகிறோம் என்பதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்றே சந்தேகிக்கிறேன். ஆகவே சி.பி.ஐ.க்கு மாற்றும் முடிவினை கைவிட்டு, ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கண்காணிக்கும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை திருட்டு தடுப்புப் பிரிவு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கி, திருடு போன கோவில் சிலைகளை முறையாகக் கண்டுபிடிப்பதற்கு வழி விட்டு நியாயம் நடைபெற அ.தி.மு.க. அரசு ஒதுங்கி நிற்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஐ.ஜி. பொன் மாணிக்கவேலிடம் எனக்கு நட்போ, பரிட்சியமோ கிடையாது. அவரது நேர்மை, நாணயம், திறமை, உண்மை, துணிச்சலை நான் நன்கு அறிவேன். தற்போது வேலூர் கோவில் சிலை திருட்டையும் கண்டுபிடித்துள்ளார். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகளை மீட்டுக் கொண்டு வந்தவர் பொன் மாணிக்கவேல் ஆவார்.

    இந்தப் பின்னணியில் சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பொன் மாணிக்கவேல் அரசுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை என்றும், சரியாகச் செயல்படவில்லை என்றும் கூறி சிலைக்கடத்தல் விசாரணையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருப்பது அப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற இருக்கும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் விசாரணையை தொடர்ந்து நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். ஐகோர்ட்டில் தொடுத்த மனுவைத் திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொன் மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை, எனவே, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவாக வெளிவந்துகொண்டுள்ள நிலையில், வழக்கை நீர்த்துப்போகவும், இழுத்தடிக்கவும், திசைதிருப்பவும் சி.பி.ஐ. விசாரணையை தமிழக அரசு கேட்கிறது என்பதை பாமரனும் புரிந்து கொள்ள முடியும்.

    இந்த கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு ஏற்கக்கூடாது. தொடர்ந்து பொன் மாணிக்கவேல் விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனைப் பெற்றுத்தந்திட வேண்டும்.



    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பது துரதிஷ்டமானது. ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குழுவினர் தொடர்ந்து சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டி.ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நடத்தி வரும் விசாரணை திருப்தி இல்லை என்று அரசு கூறி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    இப்படி ஒரு திடீர் முடிவுக்கு அரசு செல்ல என்ன காரணம்? நமது போலீசார் மீது நம்பிக்கை இல்லையா? பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பக்கபலமாக இருந்து உதவி செய்ய வேண்டிய அரசு, இப்படி எதிர்ப்பு நிலையை கடைபிடிப்பது உண்மை குற்றவாளிகள் சிக்காமல் போய்விடுவார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Vaiko #MKStalin
    Next Story
    ×