search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் பார்களில் கப்புகள்-தண்ணீர் பாக்கெட் பயன்படுத்த இன்று முதல் தடை
    X

    டாஸ்மாக் பார்களில் கப்புகள்-தண்ணீர் பாக்கெட் பயன்படுத்த இன்று முதல் தடை

    பிளாஸ்டிக் இல்லா தமிழகம் படைப்போம் என்ற நோக்கில் டாஸ்மாக் பார்களில் கப்புகள் மற்றும் தண்ணீர் பாக்கெட் பயன்படுத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. #PlasticBan

    திருச்சி:

    பிளாஸ்டிக் இல்லா தமிழகம் படைப்போம் என்ற நோக்கில் வருகிற 2019 ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்து இருந்தார்.

    இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக தற்போது முதலே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இதன் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல் குறித்த மதுக் கூட (பார்கள்) உரிமதாரர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கடந்த மாதம் 20-ந்தேதி தமிழ்நாடு மாநில வாணிப கழக திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் இன்று (1.8.2019) முதல் அனைத்து மதுக்கடைகளிலும் கலெக்டரின் அறிவுரைகளின் படி பிளாஸ்டிக் இல்லா திருச்சி என்ற இலக்கை அடைய திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

    இதற்கான அறிவிப்பு ஸ்டிக்கரை அலுவலகத்தில் இருந்து பெற்று வாடிக்கையாளர்களுக்கு தெரியும்படி மதுக்கூடங்களில் ஒட்டி வாட்ஸ்அப் மூலம் டிஎம்ஓ குரூப்பில் போட்டோ அனுப்ப வேண்டும். இதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறும் மதுக் கூடங்கள் மற்றும் கண்காணிக்க தவறிய மேற்பார்வையாளர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அத்துடன் திருச்சி கிழக்கு மற்றும் லால்குடி, துறையூர் மற்றும் மண்ணச்சநல்லூர், முசிறி மற்றும் தொட்டியம், ஸ்ரீரங்கம் மற்றும் திருவெறும்பூர், திருச்சி மேற்கு, மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஆகிய பகுதிகளில் மாவட்ட மேலாளர், கிடங்கு மேலாளர், கலால் மேற்பார்வை அலுவலர், கிடங்கு உதவி மேலாளர், உதவி மேலாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்வார்கள் என்றும் அறிவிப்பு வெளியானது.

    குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்படும் மக்காத பிளாஸ்டிக் தண்ணீர் கப்புகள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்றும் வலியுறுத்தும் வகையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கலெக்டரை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×