search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரியால் பாதிப்பு: பிரம்பு தொழில் கடும் வீழ்ச்சி
    X

    ஜி.எஸ்.டி. வரியால் பாதிப்பு: பிரம்பு தொழில் கடும் வீழ்ச்சி

    ஜி.எஸ்.டி. வரியால் பிரம்பு தொழில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். #GST

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் பிரம்பு மூலம் கைவினை பொருட்கள் செய்வதில் சிறந்து விளங்குகின்றனர். பிரம்பு மூலம் இங்கு ஊஞ்சல், சோபாசெட், குழந்தைகளுக்கான ஊஞ்சல் மற்றும் நாற்காலிகள், டைனிங் டேபிள், கட்டில், அலமாரி, பீரோ, அரிசி கூடை, அர்ச்சனை கூடை, பழ கூடை, அலங்காரகூடை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளவர்கள் அணிந்து கொள்ளும் தொப்பி ஆகியவைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதற்கான பிரம்புகளை அஸ்ஸாம், அந்தமான், மலேசியா ஆகிய பகுதிகளிலிருந்து ஏஜெண்டுகள் மூலம் வாங்குகின்றனர் . தைக்கால் கிராமத்தில்மட்டும் 60 பிரம்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிரம்பு பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

    மூங்கில்பிரம்பு, அந்தமான்பிரம்பு, ரைடான், ஜாதி என்ற 4 வகை பிரம்புகளை பயன்படுத்தி கைவினை பொருட்களை செய்கின்றனர். ரைடான் வகை பிரம்பு மிகவும் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.

    இங்கு செய்யப்படுகின்ற பிரம்பு பொருட்கள் கோவை, சென்னை வேலூர், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தைக்காலில் உள்ள அனைத்து கடைகளில் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து பிரம்பு தொழிலில் காலம் காலமாக ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் குடும்பங்கள் இத்தொழிலை வைத்துதான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். குடிசைத்தொழிலாக அங்கீகரிக்கப்பட்ட இந்த பிரம்பு தொழில் ஆடம்பர பொருள்கள் தயாரிக்கும் தொழிலில் சேர்க்கப்பட்டு ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்படுவதால் பிரம்புகளின் விலை அதிகமாகி விட்டது. இதனால் இத்தொழில் மூலம் போதிய லாபம் கிடைக்கவில்லை என்கின்றனர்.

    இதுபற்றி ஜாமாலுதீன் என்பவர் கூறுகையில், தைக்காலில் பிரம்புதொழிலில் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அனைவரும் இத்தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    ஒருமாதத்திற்கு 15 நாள் முதல் 20 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. இத்தொழிலை வைத்து தான் குடும்பம் நடத்த வேண்டியிருக்கிறது. இத்தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது. குடிசைத் தொழிலாக இருந்த இத்தொழிலை அரசு ஆடம்பரபொருட்கள் தயாரிக்கும் தொழிலாக அறிவித்து ஜி.ஸ்.டி. வரியும் விதித்துள்ளதால் பிரம்புகளின் விலையும் அதிகரித்துள்ளது.

    இதனால் விற்பனை கடந்த சில மாதங்களாக குறைந்து தற்போது போதிய லாபம் கிடைக்கவில்லை என்றார். மற்றொரு தொழிலாளர் குறள்தாசன் கூறுகையில், இது வரை பிரம்பு தொழிலுக்கு அரசு எந்த உதவியும் வழங்கவில்லை வங்கி கடன் கேட்டு பல முறை கோரிக்கை விடுத்தும் வங்கி கடன் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே அரசு பிரம்பு தொழிலுக்கு இத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மானியத்துடன் வங்கி கடன் வழங்க வேண்டும். மேலும் ஆடம்பரத்தொழிலை மாற்றி குடிசைத் தொழிலாக மாற்றவும், வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .

    Next Story
    ×