search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்லங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு
    X

    கொல்லங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு

    சிவகங்கை அருகே கொல்லங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு செய்து அங்கிருந்த பழுதடைந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த கொல்லங்குடியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் முன்னிலை வகித்தார்.

    முகாமில் கொல்லங்குடி, கீரனூர் கண்டனிப்பட்டி, சாத்தம்புளி, அரியாக்குறிச்சி, அழகாபுரி மேப்பல், பெரிய நரிக்கோட்டை, நடுவாளி, தச்சன்கண்மாய், உசிலனேந்தல், கல்லணை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வழங்குவதற்கு தேவையான பணிகள் நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், புதிதாக மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், முதியோர் உதவித் தொகை மற்றும் தெருவிளக்கு அமைத்தல், பட்டா மாறுதல், பசுமை வீடு வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கினர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.

    அதன் பின்னர் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:-

    தமிழக அரசின் திட்டங்கள் கிராமப் பகுதிகளில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    பொதுவாக இந்த குறைதீர் முகாமில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாகவும், முதியோர் உதவித்தொகை கேட்டும் அதிக அளவில் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கண்மாய் மடைகளை சீரமைக்க வேண்டும் என்றால் உடனடியாக இது குறித்து தகவல் தெரிவித்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் வக்கீல் ராஜா, ஆர்.எம்.எல் மாரி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சசிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோதாயுமானவன் நன்றி கூறினார்.

    முன்னதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொல்லங்குடியில் உள்ள தொடக்கப் பள்ளி கூடத்தை அமைச்சர் பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கிருந்த மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் சரியான நேரத்தில் வகுப்புகளுக்கு வருகிறார்களா என்றும் சத்துணவு சரியாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.

    மேலும் அங்குள்ள குடிநீரை குடித்து பார்த்த அமைச்சர் அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கூட கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் அதை அகற்றிவிட்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    Next Story
    ×