search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலையில் பெண் ஊழியர் சிக்கினார்
    X

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலையில் பெண் ஊழியர் சிக்கினார்

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கில், பெண் ஊழியர் சிக்கினார். அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    திருச்சி ராஜாகாலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பூபதி கண்ணன் (வயது 45). இவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (வேளாண்மை பிரிவு) பணியாற்றி வந்தார். பூபதி கண்ணனின் மனைவியான அனுராதா திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். பூபதி கண்ணன் தினமும் காரில் பணிக்கு சென்று வருவது வழக்கம். கடந்த 27-ந் தேதி பணிக்கு சென்ற பூபதி கண்ணன், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை மனைவி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பூபதி கண்ணன் திருச்சி அருகே மாத்தூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே கார் நின்றது. கள்ளக்காதல் விவகாரத்தில் அவரை மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கொலையான பூபதி கண்ணனின் செல்போனை வைத்து, அவரிடம் யார் அதிகம் பேசி உள்ளனர் என போலீசார் விசாரித்தனர்.

    இதில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அவருடன் டைப்பிஸ்டாக பணியாற்றும் திருச்சி நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த சவுந்தர்யா அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    பூபதி கண்ணன் திருச்சியில் இருந்து பணிக்கும் செல்லும் போது, சவுந்தர்யாவையும் காரில் ஏற்றிச்சென்று வந்துள்ளார். மேலும் 2 பேரும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றியதால் அவர்களது பழக்கம் நெருக்கமானது. அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. சவுந்தர்யாவின் கணவர் இறந்து விட்டார்.

    சம்பவத்தன்று பூபதி கண்ணனுடன் சவுந்தர்யா காரில் வந்துள்ளார். தொண்டைமான்நல்லூர் சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சோதனையிட்ட போது, பூபதி கண்ணனின் காரில் சவுந்தர்யா இருந்தது பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×