search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே போலீசாரை கண்டித்து தோட்ட தொழிலாளர்கள் மறியல்
    X

    கூடலூர் அருகே போலீசாரை கண்டித்து தோட்ட தொழிலாளர்கள் மறியல்

    கூடலூர் அருகே லோயர்கேம்ப் போலீஸ் நிலையம் முன்பு, போலீசாரை கண்டித்து பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கூடலூர்:

    கம்பம், போடி, கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளில் உள்ள தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் சென்று வருவதற்காக அதிகளவில் ஜீப்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் லோயர்கேம்ப் போலீஸ் நிலையம் முன்பு, சப்–இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிகளவு ஆட்களை ஏற்றி வந்த ஜீப்களுக்கு அபராதம் விதித்ததாக தெரிகிறது. மேலும் ஜீப் டிரைவர்களையும், தோட்ட தொழிலாளர்களையும் போலீசார் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் பரவியதை அடுத்து, நேற்று காலை தோட்டங்களுக்கு வேலைக்கு புறப்பட்ட தொழிலாளர்கள், ஜீப்களில் லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்துக்கு முன்பு வந்தனர். பின்னர் அவர்கள், ஜீப்களை சாலையில் நிறுத்தி விட்டு போலீஸ் நிலையம் முன்பு கம்பம்–குமுளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் பெண்களை இழிவாக பேசிய போலீசாரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொழிலாளர்களை அவதூறாக பேசிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் உறுதி கூறினர். இதையடுத்து தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘பெண் தொழிலாளர்களை அவதூறாக பேசிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்’ என்றனர்.
    Next Story
    ×