search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை வாலிபர் மீண்டும் கைது
    X

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை வாலிபர் மீண்டும் கைது

    ஜாமீனில் வெளிவந்த சில நாட்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை வாலிபர் மீண்டும் கைது செய்யப்பட்டார். #Threat
    கோவை:

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் பீர்முகமது என்ற பச்சை மிளகாய் (வயது 35), கூலி தொழிலாளி. இவர் கடந்த மாதம் 25-ந் தேதி சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, கோவை குனியமுத்தூரில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்றும் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    மிரட்டல் வந்த எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தி பீர்முகமதுவை கைது செய்தனர். அவர் குடிபோதையில் செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தார். இந்தநிலையில் பீர்முகமது நேற்று முன்தினம் மாலை மீண்டும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகாத வார்த்தைகள் பேசியதோடு, குனியமுத்தூரில் பல இடங்களில் குண்டு வைத்துள்ளேன் என மிரட்டி உள்ளார்.

    செல்போன் எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தி பீர்முகமதுவை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 294பி-தகாத வார்த்தைகளால் திட்டுதல், 506(1)- கொலை மிரட்டல் விடுத்தல், 507- மிரட்டல் விடுத்து பீதியை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இவர் ஏற்கனவே கடந்த 1 வருடத்துக்கு முன்பும் இதேபோல போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். தொடர்ந்து இதுபோன்று செயல்படுவதால் பீர்முகமதுவை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்வது குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×