search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக எல்லைக்கு வரும் காவிரி நீரின் அளவு குறைந்தது
    X

    தமிழக எல்லைக்கு வரும் காவிரி நீரின் அளவு குறைந்தது

    காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 80,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Metturdam #Cauvery
    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கியது. தற்போதும் அங்கு மழை நீடித்து வருகிறது.

    இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று பகல் 12 மணிக்கு மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பி அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இருபுறங்களை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 80,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக குறைந்தது. தஞ்சை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு விநாடிக்கு 28,057 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் 7,013 கன அடி நீரும், வெண்ணாற்றில் 2,022 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாயில் 2,513 கன அடி நீரும், கொள்ளிடத்தில் 7,018 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தொடர்ந்து 17-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Metturdam #Cauvery

    Next Story
    ×