search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயின் பறிப்பு கொள்ளையர்களால் சென்னை பெண்கள் கலக்கம்- ஜாமின் கிடைப்பதால் மீண்டும் கைவரிசை
    X

    செயின் பறிப்பு கொள்ளையர்களால் சென்னை பெண்கள் கலக்கம்- ஜாமின் கிடைப்பதால் மீண்டும் கைவரிசை

    சென்னையில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களால் பெண்கள் தனியாக வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்களுக்கு எளிதில் ஜாமின் கிடைப்பதால் தொடர்ந்து கைவரிசை காட்டுகின்றனர். #ChennaiChainSnatching
    சென்னை:

    பரந்து விரிந்த தலைநகர் சென்னையில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று சவால் விட்டபடியே செயின்பறிப்பு கொள்ளையர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

    இதற்கு முன்னர் செயின் பறிப்பு, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யார்-யார்? என்பதை போலீசார் எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிது புதிதாக புற்றீசல்களை போல வழிப்பறி கொள்ளையர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

    குறிப்பாக கல்லூரி- பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே தங்களது கை செலவுக்காக செயின்பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களும் சங்கிலி பறிப்பில் ஈடுபடுகிறார்கள்.

    மோட்டார் சைக்கிளில் வலம் வரும் கொள்ளையர்கள் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். நடந்து செல்லும் பெண்களிடமும், மோட்டார் சைக்கிள்களில் சிட்டாய் பறக்கும் பெண்களிடமும் இளைஞர்கள் கைவரிசை காட்டுகிறார்கள். பரபரப்பான சாலைகளில் மக்கள் நடமாட்டம் இருக்கும்போதே செயின் பறிப்பு சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கிறதே? அது எப்படி என்று போலீசாரிடம் கேட்டால், எல்லாம் ‘‘போதை செய்யும் வேலை’’ என்கிறார்கள்.

    மதுபோதையிலோ, அல்லது கஞ்சா போதையிலோ சுற்றிவரும் இளைஞர்கள் தான் துணிச்சலாக செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள் என்றும், போதை அவர்களது பயத்தை போக்கி விடுகிறது என்றும் கூறுகிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொள்ளையர்களை விரட்டிச் சென்ற பெண் ஒருவர் பட்டினப்பாக்கம் கடற்கரையில் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபகாலமாக சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், செயின் பறிப்பில் ஈடுபடும் போதை வாலிபர்கள் ஈவு இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. செயினை கையில் பிடித்துக் கொண்டு போராடிய பெண்களை தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ காட்சிகளும் பதைபதைப்பை ஏற்படுத்தின.



    இதன் பின்னரே, கொள்ளையர்கள் மீதான பிடி இறுகத் தொடங்கியது. உயிருக்கு உலை வைக்கும் விதத்தில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் நடந்து கொள்வதை பார்க்கும் போது, இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? என்றே எண்ண தோன்றுகிறது.

    செயின் பறிப்பு இல்லாத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு சென்னையில் தினமும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது 10 பெண்களாவது தங்களது செயினை பறி கொடுக்கிறார்கள்.

    இதனை கட்டுப்படுத்த போலீசார் 2 ஷிப்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரையிலும், 4 மணியில் இருந்து காலை 8 மணி வரையிலும் என 2 ஷிப்டுகளாக போலீசார் பணிபுரிந்தும் பெரிய அளவில் அதற்கு பலன் கிடைக்கவில்லை. செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.



    கோயம்பேடு மேம்பாலத்தில் நடந்த செயின் பறிப்பில் பாலம்மாள் (70) என்ற பெண் படுகாயம் அடைந்தார். தனது மருமகள் இந்திராவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் செயினை கொள்ளையர்கள் பறித்தனர். அப்போதுதான் பாலம்மாள் தவறி விழுந்து காயம் அடைந்தார்.

    இந்த சம்பவத்தின் போது இந்திராவின் மகன் நித்தியும் முன்னால் அமர்ந்திருந்தான். அதிர்ஷ்டவசமாக அவன் கீழே விழவில்லை.

    இப்படி நீண்டு கொண்டே செல்லும் செயின் பறிப்பு சம்பவத்தை கட்டுப்படுத்த, போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ‘‘3-வது கண்’’ என்று பெயரிட்டு, கேமராக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் போலீசார் அதன் மூலமாகவே குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள். இதனால் குற்றங்கள் குறையும் என்று போலீசார் நம்புகிறார்கள்.

    செயின் பறிப்பில் ஈடுபடும் வாலிபர்கள் கைதாகி சிறை சென்றாலும் உடனடியாக ஜாமினில் வந்து விடுகிறார்கள். வழக்கு செலவுக்காக மீண்டும் செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். இதுவும் செயின் பறிப்பு குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ‘‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’’ என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. #ChennaiChainSnatching
    Next Story
    ×