search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு மொழிபெயர்ப்புக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை - பாண்டியராஜன் பேட்டி
    X

    நீட் தேர்வு மொழிபெயர்ப்புக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை - பாண்டியராஜன் பேட்டி

    நீட் தேர்வு மொழிபெயர்ப்புக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #NeetExam #MinisterPandiarajan

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் சங்கர மட வளாகத்தில் ஜயேந்திரர் பண்மணிமாலை நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. காஞ்சி சங்கராச் சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நூலை வெளியிட்டு அருளுரை வழங்கினார்.

    முதல் பிரதியை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், வேளாக்குறிச்சி சத்தியஞான மகாதேவ தேசிய பரமாச் சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதினம், சிவஞான பாலய்ய சுவாமிகள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலின் தொகுப்பாசிரியர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:-

    இந்த விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த நூலின் கவிதை வரிகள் பாரதியாரின் கவிதை வரிகள், பிள்ளைத்தமிழ், அபிராமி அந்தாதி போன்றும் வெண்மணி மாலை போன்றும் தொகுக்கப்பட்டுள்ளது.

    வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தாமிரவருணி புஷ்கரணி திருவிழா ஒரு சரித்திர நிகழ்வாக அமையும். ஆதினங்கள் மடாதிபதிகள் அனைவரும் ஒன்று கூடி நடத்தும் அற்புத விழாவாக அது அமையும்.

    தமிழ்மொழியின் பெருமையை பறைசாற்றும் விதமாக ஆயிரம் தமிழ்ப்படைப்புகளை வெளியிட விழாக்குழுவினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த விழா சிறப்பாக நடைபெற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைதொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வு தமிழ் வினாத் தாள் மொழி பெயர்ப்பு விவகார குளறுபடிக்கு தமிழக அரசுதான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

    இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு எந்த ஒரு மொழி பெயர்ப்பாளரையும் பரிந்துரை செய்யவில்லை. சி.பி.எஸ்.இ. சார்ந்த வல்லுனர்களை வைத்துத்தான் வினாத் தாளை மொழி பெயர்த்துள்ளனர். இதற்கு முழுப் பொறுப்பு சி.பி.எஸ்.இ.யை சாரும். இதற்கும் தமிழக மொழிபெயர்ப்புத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் காசிமட திருஞான சம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் மெளனமடம் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், பூனம்பட்டி ஆதினம் ராஜசரவண மாணிக்க வாசக சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், கோவை காமாட்சிபுர ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதினம் சங்கரலிங்க தேசிக பராமாச்சாரிய சுவாமிகள், டாக்டர் சுதா சேஷைய்யன்,கவிஞர் குருநாதன் ரமணி, வாலாஜாபாத்.பா.கணேசன், வி.சோமசுந்தரம், காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #NeetExam #MinisterPandiarajan

    Next Story
    ×