search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே வெள்ளப்பெருக்கு- அமராவதி ஆற்றில் மூழ்கிய பிளஸ்-2 மாணவர் கதி என்ன?
    X

    கரூர் அருகே வெள்ளப்பெருக்கு- அமராவதி ஆற்றில் மூழ்கிய பிளஸ்-2 மாணவர் கதி என்ன?

    கரூர் அருகே அமராவதி ஆற்றில் சிக்கிய பிளஸ்-2 மாணவரை 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    கரூர்:

    கரூர் திருமாநிலையூரை அடுத்த செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி, அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி செல்வி, அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் ஹரி (வயது 17). பிளஸ்-2 முடித்து விட்டு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வுக்காக தயாராகி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று மதியம் ஹரி தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அப்பகுதியிலுள்ள அமராவதி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது ஆற்றின் மையபகுதிக்கு சென்ற அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சத்தம் போட்டு அப்பகுதி பொதுமக்களை அழைத்தனர். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்களில் சிலர், ஆற்றில் குதித்து ஹரியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் இது குறித்து கரூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருள் சூழ்ந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இதனிடையே ஓடும் நீரில் மாணவர் அடித்து செல்லப்பட்டிருக்கலாமா? என சந்தேகமடைந்த தீயணைப்பு வீரர்கள் திருமாநிலையூர் புதிய அமராவதி பாலம் மற்றும் கரூர் ஐந்து ரோடு உள்ளிட்ட இடங்களிலும் தேடும் பணியை தொடர்ந்தனர். ஆனால் எங்கு தேடியும் ஹரியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். ஹரியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி, ஹரியை மீட்க உரிய நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி (பொறுப்பு) கணேசன் மற்றும் நிலைய அலுவலர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் அதிகாலை முதலே தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து ஹரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மித வைகள் மூலமும் சென்று தேடினர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஹரியின் நிலைமை என்ன வென்று தெரியவில்லை.

    அவனுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் ஹரி, எங்காவது கரையோரத்தில் ஒதுங்கியிருக்கலாமா? அல்லது ஏதாவது இடத்தில் சிக்கியிருக்கலாமா? என்று தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகே உள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சுந்தரம் மகன் ராஜகுமாரன் (24). இவர் கரூரில் டெய்லராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் மரவாபாளையம் சென்ற அவர், அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி மறு கரையில் உள்ள அக்கரை கருப்பம்பாளையத்திற்கு செல்ல முயன்றார். அப்போது தண்ணீரின் வேகத்தில் ராஜகுமாரன் அடித்து செல்லப்பட்டார்.

    இந்தநிலையில் கட்டிப்பாளையம் காவிரி ஆற்றில் டி.என்.பி.எல். பம்ப் ஹவுஸ் அருகே அவரது உடல் கரை ஒதுங்கி கிடந்தது. உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #Tamilnews
    Next Story
    ×