search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே கிராம மக்களை தாக்கிய 9 ரவுடிகள் கைது
    X

    திருவள்ளூர் அருகே கிராம மக்களை தாக்கிய 9 ரவுடிகள் கைது

    திருவள்ளூர் அருகே கிராம மக்களை தாக்கிய 9 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

    திருவள்ளூர்:

    சென்னையை சேர்ந்த பிரபல ரவுடிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் ரவுடிகள் அட்டகாசம் இருந்தால் அவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவிட்டார். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம், மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரவுடியிசத்தில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அவர்கள் மீதுள்ள வழக்குகளை ஆராய்ந்து எச்சரித்து அனுப்பினர்.

    இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த மஞ்சாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி (19) திருவாலங்காட்டில் வேலை செய்துவிட்டு நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது முனுசாமியை வழிமறித்து திருவாலங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமு, பார்த்தசாரதி உள்ளிட்டோர் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு ராமு, பார்த்தசாரதி, ஜெயக்குமார், தாமோதரன், டில்லி ராஜ், சுரேஷ் உள்ளிட்ட 16 ரவுடிகள் பட்டாளம் மஞ்சாகுப்பம் கிராமத்திற்கு வந்து அங்கு பஸ் நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்த முனுசாமி, சக்கரவர்த்தி, சக்கரபாணி, கவியரசு ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    பலத்த காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து முனுசாமி திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர்.

    மீதமுள்ள 7 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். #arrestcase

    Next Story
    ×