search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிந்தாமணி கூட்டுறவு சங்கம் சார்பில் 2 திருமண மண்டபங்கள்: அமைச்சர்கள் நாளை திறந்து வைக்கிறார்கள்
    X

    சிந்தாமணி கூட்டுறவு சங்கம் சார்பில் 2 திருமண மண்டபங்கள்: அமைச்சர்கள் நாளை திறந்து வைக்கிறார்கள்

    சிந்தாமணி கூட்டுறவு சங்கம் சார்பில் கட்டப்பட்டுள்ள 2 திருமண மண்டபங்களை அமைச்சர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்கள்.

    கோவை:

    சிந்தாமணி கூட்டுறவு சங்கம் சார்பில் கட்டப்பட்டுள்ள 2 திருமண மண்டபங்களை அமைச்சர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்கள்.

    இதுகுறித்து கோவை மாவட்ட சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சிங்கை முத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிந்தாமணி கூட்டுறவு சங்கம் முன்பு ரூ.24 கோடி கடனில் இருந்தது. தற்போது இந்த கடன்கள் அடைக்கப்பட்டு லாபத்தில் இயங்க தொடங்கி உள்ளது. கோவை மாவட்டத்தில் 25 ரே‌ஷன் கடைகளை நடத்தி வருகிறோம். இதுதவிர மேட்டுப்பாளையம் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை பீளமேடு, ஒண்டிப்புதூர் பகுதிகளில் மேலும் 2 பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். சிந்தாமணி வளாகத்தில் ஜவுளிக்கடை புதிதாக திறக்கப்பட உள்ளது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். கோவை டவுன்ஹால், ஒண்டிப்புதூர் பகுதியில் 2 மருந்துக்கடைகள் கூட்டுறவு சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 15 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.

    கோவை ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகில் 3½ ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் ரூ.90 லட்சம் செலவில் 2 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் 400 கார்களை நிறுத்தும் இடவசதி உள்ளது. தனியார் மண்டபங்களை விட இந்த மண்டபங்களில் குறைந்த வாடகை நிர்ணயிக்கப்பட உள்ளது.

    கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு திருமண மண்டபங்களை திறந்து வைக்கிறார்கள். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது துணைத்தலைவர் என்.லிங்கராஜ், நிர்வாக இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×