search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் கேள்விகள் கேட்கப்படுகிறது- சசிகலா தரப்பு குற்றச்சாட்டு
    X

    ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் கேள்விகள் கேட்கப்படுகிறது- சசிகலா தரப்பு குற்றச்சாட்டு

    ‘ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் கேள்விகள் கேட்கப்படுகிறது’ என்று ஆணையத்தின் வக்கீல்கள் மீது சசிகலா தரப்பு வக்கீல்கள் குற்றம்சாட்டினர். #Jayalalithaa #JusticeArumugasamy #sasikala
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா உதவியாளர்கள் பூங்குன்றன், கார்த்திகேயன் ஆகியோர் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நேற்று குறுக்கு விசாரணை செய்தார்.

    அப்போது ஆணையத்தின் தரப்பு வக்கீல்கள் எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், ‘ஜெயலலிதா ஒரு முடிவு எடுத்தால், தீர்க்கமாக எடுப்பார். தனது முடிவை சாதாரணமாக மாற்றிக்கொள்ள மாட்டார். சம்பந்தப்பட்டவர் மீது தவறு இல்லை என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே மீண்டும் சேர்த்துக்கொள்வார். 2011-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கம் செய்தார்.

    2012-ம் ஆண்டு சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்டார். மற்ற 11 பேரை ஜெயலலிதா கடைசிவரை சேர்த்துக்கொள்ளவில்லை. அவர்கள் தவறு செய்தவர்கள் என்று தெரிந்து தான் ஜெயலலிதா அவர்களை சேர்த்துக்கொள்ளவில்லை’ என்று கூறி ‘இது சரிதானா’ என்று கார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘ஆமாம்’ என்று பதில் அளித்தார்.

    அதேபோன்று, ‘ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் 11 பேர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சென்றார்கள். இது அனைத்து அமைச்சர்களுக்கும் தெரியும். ஆனால், அவர்கள் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரால் ஒதுக்கப்பட்டவர்களை சசிகலா தன்னுடன் நெருக்கமாக இருக்க அனுமதித்தார்.

    ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டதும், இதுசம்பந்தமாக முடிவு எடுக்கும்போது ஜெயலலிதாவால் விலக்கி வைக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்’ என்று கூறி ‘இதுவும் சரிதானா’ என்று ஆணையத்தின் வக்கீல்கள் கேள்வி எழுப்பினர். அதற்கும், ‘ஆமாம்’ என்று கார்த்திகேயன் பதில் அளித்தார்.

    ஆணையத்தில் ஆஜரான பூங்குன்றனிடம், ஜெயலலிதாவின் பணிப்பெண்கள் குறித்தும், அவர்களது பணிகள் குறித்தும் ஆணையத்தின் வக்கீல்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ‘ஜெயலலிதா எனது தாய்க்கு நிகரானவர்’ என்று கூறி பூங்குன்றன் கண்கலங்கினார்.

    அதேபோன்று, 2015-ம் ஆண்டு கோடநாடு எஸ்டேட்டுக்கு பதிவாளரை வரவழைத்து ஏதேனும் பத்திரம் பதிவு செய்யப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு பூங்குன்றன், ‘அதுபோன்று எதுவும் இல்லை’ என்று பதில் அளித்தார். ஆணையம் தரப்பு வக்கீல்களின் இந்த கேள்விகளுக்கு சசிகலா தரப்பு வக்கீல் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

    இதன்பின்பு ஆணையத்தில் இருந்து வெளியே வந்த வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன், ‘ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க வேண்டிய ஆணையத்தில் தேவையில்லாமல் பல கேள்விகளை ஆணையத்தின் வக்கீல்கள் கேட்கின்றனர். ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆணையத்தின் வக்கீல்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது, மனதுக்கு வருத்தம் அளிக்கும் வகையில் இருக்கிறது’ என்று நிருபர்களிடம் கூறினார்.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர்.-அம்மா- தீபா பேரவை பொதுச்செயலாளருமான ஜெ.தீபா சார்பில் அவரது வக்கீல் தொண்டன் சுப்பிரமணி நேற்று ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘ ஆணையத்தில் ஆஜரான பலர் ஜெயலலிதா மரணம் குறித்து பொய்யான வாக்குமூலத்தை அளித்துள்ளனர். அவர்களது சொல்வது உண்மையா? இல்லையா? என்பதை ஆணையம் உறுதி செய்ய எனது தரப்பு வக்கீல் உடன் இருப்பது அவசியம் என கருதுகிறேன்.

    எனவே, சாட்சிகளிடம் விசாரணை நடத்தும்போது எனது தரப்பு வக்கீலை அனுமதிக்க உத்தரவிட வேண்டும். அதேபோன்று அப்பல்லோ ஆய்வின் போது ஆணையத்துக்கு உதவுவதற்காக என்னையும், எனது தரப்பு வக்கீலையும் அனுமதிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

    ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராக ஆணையம் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. ஜெயலலிதா மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்பதால் தனக்கு அனுப்பிய சம்மனை திரும்ப பெற வேண்டும் என்று குருமூர்த்தி தனது வக்கீல் மூலம் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது சசிகலா தரப்பு வக்கீல், ‘ஆடிட்டர் குருமூர்த்தி ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தவறான தகவல்களை அளித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்திருந்தார். அப்போது ஆதாரமில்லாத பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் கூறியிருந்தார்’ என்றார். இதற்கு குருமூர்த்தி தரப்பு வக்கீல்கள் பதில் அளிப்பதற்காக வருகிற 26-ந் தேதிக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

    வருகிற 24-ந் தேதி அப்பல்லோ செவிலியர் ராஜேசுவரி, ஊட்டச்சத்து நிபுணர் புவனேசுவரி சங்கர் ஆகியோரும், 25-ந் தேதி துக்ளக் பதிப்பாளர் சுவாமிநாதன், அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் ஆகியோரும், 26-ந் தேதி அப்பல்லோ மருத்துவர்கள் சுப்பிரமணியன், சுமனா மனோகர் ஆகியோரும், 27-ந் தேதி அப்பல்லோ மருத்துவர் சஜன் கே ஹெக்டே, செவிலியர் ஜோஸ்னோமோல் ஜோசப் ஆகியோரும் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. #Jayalalithaa #JusticeArumugasamy #sasikala
    Next Story
    ×