search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் வன்முறையை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும் - மு.க.ஸ்டாலின்
    X

    பாலியல் வன்முறையை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    பாலியல் வன்முறையை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இதயமுள்ள எவரையும் நடுங்கவைக்கும் கொடூரம் சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்திருக்கிறது. ஏதுமறியா அந்தப்பிஞ்சு உடலையும், உள்ளத்தையும் 17 பேர் சீரழித்திருப்பது மன்னிக்க முடியாத மாபாதகச் செயல்.

    அந்தக் குடியிருப்பின் பாதுகாப்பு பணியிலும், பராமரிப்பு பணியிலும் இருந்தவர்களே 7 மாதங்களாக அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்திருக்கிறார்கள் என்பதும், அது வெளியே தெரியாத வகையில் சிறுமியை மிரட்டியிருக்கிறார்கள் என்பதும், கொடூரத்தின் வலி தெரியாத வகையில் போதை ஊசி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் நம் இதயத்துடிப்பை எகிறவைத்து, தமிழ்நாட்டில் பெண் பிள்ளைகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு என்ன நிலையில் இருக்கிறது என்ற கோபம் மக்கள் மனதில் வெடிக்கிறது.

    சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்முறை நிகழ்வுகளை தடுத்திடும் வகையில் உரிய முறையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டு, அவை முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், அந்த அக்கறை இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. அயனாவரத்தில் சிறுமி, திருவண்ணாமலையில் ரஷிய நாட்டுப் பெண் என்று பாலியல் கொடுமைக்கு இலக்காகி பரிதவிப்போரின் எண்ணிக்கை தொடர்கிறது, உயர்கிறது.

    இந்த வேதனை மிகுந்த நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டிய அரசும், காவல்துறையும் தொடர்ந்து அலட்சியம் காட்டினால், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அயனாவரத்திலும், திருவண்ணாமலையிலும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் நேர்ந்த கொடூரத்தின் உண்மைப் பின்னணிகளை முழுமையாக விசாரித்து, குற்றமிழைத்த அனைவரையும் தண்டித்திட வேண்டும். அதற்கேற்ற வகையில் வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இனி எந்த ஒரு பெண்ணுக்கும், சிறுமிக்கும் இந்த அவலம் நேர்ந்திடக்கூடாது. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது தனி கவனம் செலுத்திட வேண்டியது அவசியமாகிறது. இல்லத்தரசியராய் இருந்தாலும், மற்ற பணிகளை மேற்கொள்வோராய் இருந்தாலும் தாய்மார்கள் மிகுந்த அக்கறையுடன் குழந்தை வளர்ப்பில் ஈடுபடுவது தாய்மைக்கே உரிய சிறப்பம்சம்.

    வளர்ந்துவரும் தொழில்நுட்பம் பெருகிவரும் குற்றங்கள் இவற்றை கருத்தில்கொண்டு, பிள்ளைகளின் நடவடிக்கைகளையும் அவர்களிடம் ஏற்படும் மனமாற்றங்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்து, நல்ல ஆலோசகர்களாக செயல்பட வேண்டிய கடமையும் தாய்மார்களுக்கு இருக்கிறது. அதில் தந்தையின் பங்கும் முக்கியமானது. அப்போது தான், பாலியல் தொல்லைகளுக்கு வேலியிட்டு சிறுமிகளை பாதுகாத்திட முடியும். இன்னொரு முறை இந்த மாபாதகம் தமிழகத்தில் நடக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #ChennaiHorror #Ayanavaram #ChildAbuse
    Next Story
    ×