search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி மாநில கவர்னரை திரும்பப்பெறக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
    X

    புதுச்சேரி மாநில கவர்னரை திரும்பப்பெறக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

    புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.முருகன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    யூனியன் பிரதேசங்களுக்கு துணைநிலை கவர்னரை நியமிக்க அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, அரசு பணத்தை வீணடிக்கும் வகையில் கவர்னர் நியமனம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். தற்போது புதுச்சேரி மாநில கவர்னராக உள்ள கிரண்பெடி அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறார். ஆளுங்கட்சியின் செயல்பாடுகளில் தேவையின்றி குறுக்கீடுகளையும், இடையூறுகளையும் செய்துவருகிறார்.

    குறிப்பாக அரசு பணியாளர் நியமனம், மருத்துவ மாணவர் சேர்க்கை, அதிகாரிகள் மாற்றம் என தலைமை செயலாளர் எடுக்கும் முடிவுகளில் கிரண்பெடியின் தலையீடு அதிகரித்து வருகிறது. இதன்மூலம் பதவி பிரமாணத்தின்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை அவர் மீறிவிட்டார். எனவே அவரை திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் இந்த வழக்கை வேறு டிவிசன் பெஞ்சு நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

    இதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி மாநில கவர்னர் அதிகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு புதுச்சேரி மாநில கவர்னருக்கும் பொருந்தும் என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #PuducherryGovernor #KiranBedi
    Next Story
    ×