search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை- எச்.வசந்தகுமார் எம்எல்ஏ வழங்கினார்
    X

    மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை- எச்.வசந்தகுமார் எம்எல்ஏ வழங்கினார்

    கோவையில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எச். வசந்தகுமார் எம்எல்ஏ மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை சின்னதடாகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 116-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. தொழில் அதிபர் ஆறுமுகசாமி தலைமை வகித்தார். சின்னதடாகம் ஊராட்சி முன்னாள் தலைவர் டி.என்.வேலுச்சாமி வரவேற்று பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ சின்னராஜ், முன்னாள் டி.எஸ்.பி வெள்ளிங்கிரி, முன்னாள் ஒன்றிய சேர்மன் வீரபாண்டி விஜயன், குருடம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பி.வி.மணி, சரவணகுமார், புலவர் அப்பாவு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் எச்.வசந்த குமார் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,

    காமராஜர் தொலை நோக்கு பார்வையில் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் பள்ளிகளை கொண்டு வந்தார். பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் தேவையான இடங்களில் பாலங்கள், தடுப்பணைகள் கட்டி விவசாய வளர்ச்சிக்கு வித்திட்டார்.

    முதன் முதலில் அரசு ஆவணங்களை தமிழில் கொண்டு வந்தவர் காமராஜர். தமிழுக்காக கொண்டு வந்த பல சட்டங்கள் காமராஜரையும், காங்கிரசையும் சாரும். விவசாயி மகனும் கூட மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க வழிவகை செய்தவர். தமிழகத்தில் பெரிய பெரிய தொழிற்சாலைகள் அவரது ஆட்சிகாலத்தில் தான் உருவாக்கப்பட்டது. அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்று மதிய உணவு திட்டத்தையும் கொண்டு வந்தவர். இவரை போல இன்று ஆட்சியாளர்கள் யாரும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து சின்னதடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கேடயங்கள், 170 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும், 6ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சீருடைகளும் வழங்கினார். மேலும் ரவுண்ட் டேபிள் 133 சங்கம் சார்பில் கோவனூர் நடுநிலைப்பள்ளிக்கு புரொஜக்டர் வழங்கப்பட்டது. 

    இந்த விழாவில் பன்னிமடை செல்வராஜ், ரத்தினசாமி, ராமலிங்கம், நஞ்சுண்டபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் வி.கே.வி சுந்தரராஜ், ஆனந்த், சுப்புசாமி, மோகன்ராஜ், குணசேகர், தலைமை ஆசிரியர்கள் அருள்ஜோதி, பெரில்குமாரி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×