search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சியில் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது
    X

    பொள்ளாச்சியில் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது

    பொள்ளாச்சியில் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரை கத்தியால் குத்திய ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    ஈரோடு மாவட்ட கியூ பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் செல்லத் துரை(வயது 45). இவர் தற்போது கோவை மாவட்டத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்துவருகிறார்.

    மாவோயிஸ்டுகள் வழக்கு சம்பந்தமாக நேற்று பொள்ளாச்சி வந்தார். அவருடன் ஈரோடு கியூ பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு மோகன சுந்தரம்(43), காவலர் பழனி ராஜ் ஆகியோர் வந்தனர்.

    வேலை முடிந்ததும் கோவை செல்ல புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுரங்கப் பாதை வழியாக பழைய பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றனர். சுரங்கப்பாதை படிக் கட்டின் நடுவில் வாலிபர்கள் சிலர் நின்றனர். அவர்களிடம் போலீசார் வழிவிடுமாறு கூறினர். அதற்கு வாலிபர்கள் தகாதவார்த்தைகள் பேசி தகராறு செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் செல்லத் துரை அவர்களை தட்டிக் கேட்டார். இதனால் ஆவேசமடைந்த வாலிபர்கள் கத்தியால் இன்ஸ்பெக்டரை குத்த முயன்றனர். இதை ஏட்டு மோகனசுந்தரம் தடுத்தார். அவரது கையில் கத்திக்குத்து விழுந்தது.

    அதிர்ச்சியடைந்த செல்லத்துரை, ரூபன் ஆகியோர் வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அவர்களுக்கும் தோள்பட்டையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசாரை கத்தியால் குத்திய வாலிபர்களை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சியைசேர்ந்த பிரேம்குமார்(25), ஸ்ரீநாத்(24), கோவை பூலுவாம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த விஜய்(24) என்பது தெரிய வந்தது.

    இவர்களில் விஜய், பிரேம் குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 3 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    கத்திக்குத்தில் காயமடைந்த ஏட்டு மோகனசுந்தரத்துக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இன்ஸ்பெக்டர் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர் ரூபன் ஆகியோர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

    Next Story
    ×