search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்
    X

    துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்

    துறைமுகம்- மதுரவாயல் சாலை பணிகள் இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் இந்த திட்ட பணிகள் தொடங்குகிறது. அடுத்த நிதி ஆண்டில் இது முழுமையாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டது.

    கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, இந்த திட்டம் தொடங்கியது. இதற்கான தூண்கள் அமைக்கப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. நீர்வழிபாதைக்கு இடையூறு இல்லாமல் இந்த பாதையில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

    கடந்த 5 ஆண்டுகளாக இந்த சாலை அமைக்கும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்த சாலை பணிகள் மீண்டும் தொடங்க இருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில தலைமை பொது மேலாளர் அலோக் தீபங்கர் தெரிவித்துள்ளார்.

    துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை முதலில் 4 வழி சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது நேப்பியார் பாலத்தில் இருந்து 6 வழிசாலையாக அமைக்கப்பட உள்ளது.

    இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் இந்த திட்ட பணிகள் தொடங்கும். அடுத்த நிதி ஆண்டில் இது முழுமையாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த சாலை மொத்தம் 19 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. தேசிய நெடுஞ்சாலை சார்பில் இந்த பறக்கும் சாலையின் புதிய வடிவமைப்பு தயாரிக்கப்படுகிறது. மாநில அரசால் மாற்றி அமைக்கப்பட்ட பாதையில் இந்த சாலை அமைகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


    முதலில் 4 வழி சாலையாக அமைய இருந்ததால் 17 மீட்டர் அகலம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது 6 வழி சாலை ஆவதால் அது 26 மீட்டர் அகலம் கொண்டதாக மாற்றப்படுகிறது. முன்பு ‘பி ஒடி’ என்ற முறையில் கட்டப்பட இருந்த இந்த பாலம் தற்போது ‘இபிசி’ என்ற நவீன தொழில் நுட்பத்தில் உருவாக இருக்கிறது.

    இந்த பறக்கும் சாலையுடன் இணையும் வகையில் 10 இடங்களில் சர்வீஸ் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதனால் காமராஜர் சாலை, சூப்பர் டேங்க் ரோடு, கோயம்பேடு, சிவநந்தா சாலை, காலேஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் இந்த சாலையுடன் இணைய முடியும். மதுரவாயல் சாலையில் வரும் வாகனங்கள் இந்த இடங்களில் வெளியேறவும் வழி ஏற்படும்.

    மாற்றி அமைக்கப்பட்டுள்ள துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலையின் புதிய வடிவமைப்புக்கு கூடுதல் செலவு ஆகும். என்றாலும் 6 வழி சாலையாக இது மாறுவதால் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #Tamilnews
    Next Story
    ×