search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆணவ கொலைகளை தடுக்க மாவட்டந்தோறும் சிறப்பு பிரிவு தொடக்கம்- ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
    X

    ஆணவ கொலைகளை தடுக்க மாவட்டந்தோறும் சிறப்பு பிரிவு தொடக்கம்- ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

    கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்கவும், ஆணவ கொலைகளை ஒழிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு பிரிவை உருவாக்கியுள்ளதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
    சென்னை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த வீரணன் என்பவரின் மகள் விமலாதேவி தந்தையிடம் டிரைவராக வேலைபார்த்த வேறு சமூகத்தை சேர்ந்த திலீப்குமார் என்பவரை 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் விமலாதேவியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்துவந்தனர்.

    பின்னர் அவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் யாருக்கும் தெரியாமல் எரிக்கப்பட்டது. இதுகுறித்து திலீப்குமார் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், 2016-ம் ஆண்டு விரிவான தீர்ப்பு ஒன்றை பிறப்பித்தார்.

    அதில், இந்த வழக்கில் சட்டத்தை மீறி கட்டப்பஞ்சாயத்து கும்பலுடன் கைகோர்த்து செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்புத்திருமணம் செய்துகொள்பவர்களை ஆணவக்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    இதை தடுக்கும் விதமாகவும், கலப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சமூகநலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும். 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தனி ‘ஹெல்ப் லைன்’ ஏற்படுத்தி புகார்களை உடனுக்குடன் பெற்று வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.

    இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாததால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஐகோர்ட்டில் உள்துறை செயலாளர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-



    விமலாதேவி வழக்கில் சட்டத்தை மீறி செயல்பட்ட செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் வினோஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி, உசிலம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல, மாவட்டந்தோறும் டி.ஐ.ஜி. அல்லது போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பிரிவு மற்றும் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்களை தமிழக காவல்துறையின் இணையதளத்தில் வெளியிட கடந்த ஏப்ரல் 10-ந் தேதி உத்தரவிடப்பட்டது.

    கலப்புத்திருமணம் செய்யும் காதல் ஜோடிகள் இந்த தொலைபேசி வழியாகவும், இணையதளம் மூலமாகவும் புகாரும், பாதுகாப்பு கேட்டு மனுவும் செய்யலாம். அந்த புகாருக்கான ரசீது அவர்களுக்கு வழங்கப்படும்.

    இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினந்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அந்த ஜோடிகளுக்கு தகுந்த பாதுகாப்பை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் வழங்கவேண்டும். உறவினர்கள் இவர்களை விரட்டிச்சென்றால், அதை தடுத்து அந்த ஜோடிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும்.

    ஆணவக்கொலை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கலப்புத்திருமணம் செய்வோருக்கு தற்காலிகமாக வசிக்கும் இடம், பாதுகாப்பு வழங்குதல், இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்த நிபுணர்களை நியமித்தல் உள்ளிட்டவைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கலப்புத்திருமணம் செய்துகொள்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் உதவிகளை வழங்காத அதிகாரிகள் கடுமையான குற்றம் செய்ததாக கருதப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு ஆகஸ்டு 9-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×