search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரணாம்பட்டு பகுதியில் 7 காட்டு யானைகள் அட்டகாசம்
    X

    பேரணாம்பட்டு பகுதியில் 7 காட்டு யானைகள் அட்டகாசம்

    பேரணாம்பட்டு பகுதியில் 7 காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே ஜங்கமூர் பகுதி எலகல்மலை வனப்பகுதிக்கு அருகிலுள்ள மோர்தானா அணை பகுதி, கொட்டாரமடுகு வனப்பகுதியிலிருந்து 2 குட்டியானைகளுடன் 7 காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தன.

    காட்டுயானைகளை விரட்ட முயன்ற வனத்துறையினரை ஒரு காட்டு யானை துரத்தியது. அவர்கள் தப்பி ஓடி உயிர்தப்பினர்.

    ஜங்கமூரை சேர்ந்த பட்டாபி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் புகுந்து அங்கு மாமரங்களை சேதப்படுத்தி மாமரக் கிளைகளை முறித்தது. பின்னர் அருகிலுள்ள குபேந்திரன் என்கிற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 8 கல் கம்பங்களை பிடுங்கி சாய்த்தும், கார்த்திக் என்பவர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிரை மிதித்து சேதப்படுத்தியது.

    இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையை நம்பி பயிரிட்டால் விவசாய பயிர்களை கடந்த சில நாட்களாக யானைக் கூட்டமானது தொடர்ந்து சேதப்படுத்தி கொண்டு வருவதை பார்த்த விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறினர்.

    பேரணாம்பட்டு வனசரகர் மூர்த்தி தலைமையில் வனவர்கள் ரவீந்திரன், ரகுபதி ஆகியோர் வனகாப்பாளர்கள் திருநாவுக்கரசு ரவி, நவீன் ஆகியோர் ஜங்கமூர் கிராமத்திற்கு சென்று அட்டகாசம் செய்து கொண்டிருந்த காட்டு யானைகள் கூட்டத்தை அருகிலுள்ள குண்டல பல்லி வனப்பகுதிக்கு பட்டாசு வெடித்து விரட்டினர்.

    அப்போது கூட்டத்திலிருந்து ஒரு யானை திடீரென பிளிறியவாறு வனத்துறையினரை நோக்கி திரும்பி துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் வனப்பகுதிக்குள் சென்று உயிர்தப்பினர்.

    வனத்துறையினர் ரசாயன கல்லை துப்பாக்கியில் செலுத்தி காட்டு யானைகளை நோக்கி துப்பாக்கியை இயக்கி வெடித்து காட்டுயானைகள் வனப் பகுதிக்குள் விரட்டினர். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது.

    பேரணாம்பட்டு வனப்பகுதிக்குள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×