search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் போலி இன்ஸ்பெக்டர் கைது
    X

    சென்னையில் போலி இன்ஸ்பெக்டர் கைது

    சென்னையில் வாகனங்களை மறித்து வசூல்வேட்டை நடத்திய போலி இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    சென்னை ஆவடி, ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு, சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் பின்பக்கம் இருக்கும், பின்னி சாலையில் தனது காரில் உட்கார்ந்திருந்தார்.

    அப்போது அங்கு, மோட்டார் சைக்கிளில் பந்தாவாக, ஒரு வாலிபர் வந்து இறங்கினார். அவர் டிப்-டாப்பாக காணப்பட்டார். தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறிக்கொண்டு, காரில் உட்கார்ந்திருந்த மோசசை மிரட்டல் தோணியில் விசாரித்தார். அவரது பெயர் விவரங்களை கேட்டார். ஓட்டுநர் உரிமம், காருக்கான ஆர்.சி.புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை காட்டும்படி கேட்டார். பின்னர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உன்மீது வழக்குப்போடாமல் விட்டுவிடுகிறேன். இல்லாவிட்டால் உன்மீது வழக்குப்போட்டு கைது செய்வேன் என்று அவர் தெரிவித்தார்.

    மோசசுடன் அவரது தோழியும் இருந்ததாக தெரிகிறது. ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டிய நபர் குறித்து மோசசின் தோழி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு, போலீஸ் படையோடு விரைந்து சென்றார். போலீசாரை பார்த்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறிய ஆசாமி, மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றார். அவரை போலீசார் விரட்டிச்சென்றனர். நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அவரை மடக்கிப்பிடித்தனர்.

    பிடிபட்ட ஆசாமியிடம், எழும்பூர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் நிஜாம் (33) என்றும், ராயபுரம் பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் என்றும், இவர் இரவு நேரங்களில் வாகனங்களை மடக்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று சொல்லி வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 10-ம் வகுப்பு வரை இவர் படித்துள்ளார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி வாகனங்களை மடக்கி வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக இவர் மீது ஏற்கனவே சாஸ்திரிநகர், அடையாறு, ராயப்பேட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் வசூல் வேட்டையில் ஈடுபடுவதில்லை. சாதாரணமாக டிப்-டாப்பாக உடை அணிந்து தான் வசூல் செய்துள்ளார்.

    இதன் பேரில் நிஜாம் கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிள், ரூ.5 ஆயிரம், வங்கி ஏ.டி.எம். கார்டு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×