search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டுக்கு ரூ. 250 கோடி இழப்பு - அழிவை நோக்கி கரூர் கொசுவலை உற்பத்தி
    X

    ஆண்டுக்கு ரூ. 250 கோடி இழப்பு - அழிவை நோக்கி கரூர் கொசுவலை உற்பத்தி

    கொசுவலைகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பாலி எத்திலின் குருணையின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் கரூர் பாரம்பரிய கொசுவலைகள் உற்பத்தி அழிவை நோக்கி செல்வதாக உற்பத்தியாளர்கள் வேதனை.
    கரூர்:

    கரூர் பாரம்பரிய சாதாரண (ரசாயனம் கலக்காத) கொசுவலைக்கு நாடு முழுவதும் நல்ல மவுசு உள்ளது. இங்கு 300 உற்பத்தி கூடங்கள் உள்ளன. இதில் 50 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்கின்றனர். இந்த பாரம்பரிய கொசுவலை தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதனை பொறுத்த மட்டில் பருவமழைக் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் விற்பனை அதிகரிக்கும். இதன் வாயிலாக ஆண்டுக்கு ரூ. 250 கோடி வரை வருமானம் கிடைத்து வந்தது. தற்போது வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் வழியாக கள்ளத் தனமாக கொண்டு வரப்படும் சாதாரண ரக கொசுவலைகள் எவ்வித வரியும் இன்றி இந்தியாவுக்குள் விற்பனை செய்யப்படுவதாலும். மூலப்பொருள் விலை அதிகரித்துள்ளதாலும், அனுமதியின்றி இந்தியாவில் விற்கப்படும் ரசயான கொசுவலைகளாலும் கரூர் பாரம்பரிய கொசுவலை தொழில் அழிவை நோக்கி செல்கிறது.

    இதுபற்றி சாதாரண கொசுவலைத்தொழில் உற்பத்தியாளர் சங்க தலைவர் சுரேஷ்குமார் கூறியதாவது:- கரூரில் உற்பத்தி செய்யப்படும் கொசுவலை நேர்த்தியாகவும், தரமாகவும் இருப்பதால் நாடு முழுவதும் நல்ல மவுசு உள்ளது. தற்போது கொசுவலைகள் மனிதர்கள் மட்டுமல்லாமல் அதிக வனப்பரப்பு கொண்ட கேரளம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலும், கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்யும் பகுதிகளில் மர இலைகள், குப்பைகள் கிணற்றில் விழாதவாறு தடுக்கும் வகையில் கொசுவலைகள் பயன்படுத்தப்படுகிறது.

    சில இடங்களில் பட்டுப்பூச்சிகளை பாதுகாக்க வளர்க்க அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படுகிறது. கரூர் கொசுவலைக்கு போட்டியாக மேற்கு வங்கம், பெங்களூரு உற்பத்தியாளர்கள் இருந்தனர். ஆனாலும் அவர்களால் தரமான கொசுவலை தயாரிக்க முடியாததால் அந்த நிறுவனங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு மூடிவிட்டனர். இப்போது எங்களிடம் இருந்து தான் அவர்கள் வாங்கி செல்கின்றனர்.

    கடந்த ஓராண்டாக பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக கொசுவலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருளாளன பாலி எத்திலின் குருணையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு கிலோ ரூ. 70 முதல் ரூ. 90 வரை விற்ற பாலி எத்திலின் தற்போது ரூ. 120 வரை விற்கப்படுகிறது. இதனால் கொசுவலை தொழில் ஸ்தம்பித்துள்ளது.

    மேலும் வங்க தேசத்தில் இருந்து தரமற்ற கொசுவலைகள் மேற்கு வங்க மாநிலம் வழியாக அதன் அண்டை மாநிலங்களிலும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இதனால் கரூர் கொசு வலைகள் தேங்கி வருகிறது. இப்போதும் ரூ. 100 கோடி மதிப்புள்ள கொசுவலைகள் தேக்கம் அடைந்துள்ளது. மாதம் 2000 டன் உற்பத்தி செய்து வந்த கொசுவலைகள் தற்போது 300-400 டன் கூட உற்பத்தியாகவதில்லை. இதனால் ஆண்டுக்கு ரூ. 250 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.

    மத்திய அரசு கொசுவலை மூலப்பொருளின் விலையை கட்டுப்படுத்தி, திருட்டுத்தனமாக இந்தியாவிற்குள் நுழையும் வங்கதேச கொசுவலைகளை தடை செய்தால் மட்டுமே கரூர் கொசுவலை தொழிலை காப்பாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×