search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட புஷ்பா
    X
    கொலை செய்யப்பட்ட புஷ்பா

    திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி பெண் கொலை- குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

    திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு 4 நாட்களாகியும், இதுவரை எந்த துப்பும் போலீசுக்கு கிடைக்கவில்லை. இதனால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு 2 வயதில் பெனிதா என்ற பெண் குழந்தை உள்ளது.

    தற்போது புஷ்பா 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். கடந்த 15-ந் தேதி காலை புஷ்பா வீட்டின் அருகே உள்ள பம்பு செட் கிணற்றுக்கு குளிக்க சென்றார். பின்னர் அவர் அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்பாலபந்தல் போலீசார் விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    புஷ்பா துண்டால் கழுத்து இறுக்கப்பட்டு சகதியில் முகத்தை அமுக்கி கொலை செய்யப்பட்டிருந்தார். அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையும் திருடு போயிருந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. புஷ்பாவுக்கும், அவரது கணவர் ராமதாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ராமதாஸ் மும்பையில் தங்கியிருந்து வேலைபார்த்து வந்தார். அவர் ஊருக்கு வரும்போது மனைவியிடம் தகராறு செய்து வந்தது தெரியவந்தது.

    இந்தகொலையில் ராமதாசுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்தனர். இதையொட்டி ராமதாஸ், புஷ்பாவின் மாமனார் தேவநாதன், உறவினர் சந்தோஷ் ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    குடும்ப பிரச்சனை காரணமாக ராமதாஸ் மும்பையை சேர்ந்த கூலிப்படையினரை வரவழைத்து புஷ்பாவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

    இந்த கொலையில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ் ஆகியோர் இடம்பெற்றனர்.

    இந்த தனிப்படையினர் ராமதாசை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல்போனை கைப்பற்றி அவர் யார்? யாரிடம் எப்போது பேசியுள்ளார் என்ற விவரங்களை ஆய்வு செய்தனர். ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை.

    புஷ்பா கொலை செய்யப்பட்டு 4 நாட்களாகியும், இதுவரை எந்த துப்பும் போலீசுக்கு கிடைக்கவில்லை. இதனால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

    Next Story
    ×