search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு குட்கா ஊழல் ஆவணங்களை வழங்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் மறுப்பு
    X

    அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு குட்கா ஊழல் ஆவணங்களை வழங்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் மறுப்பு

    குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்த நிலையில் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #GutkaScam
    சென்னை:

    சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் குட்கா புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி குட்கா விற்பனை நடைபெற்றது.

    இந்த நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறையினர் செங்குன்றத்தில் சில குடோன்களில் சோதனையிட்டபோது அங்கு ரகசியமாக குட்கா போதை பொருள் தயாரித்து பொட்டலங்களாக மாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

    உயர் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்கா விற்பனைக்கு அனுமதி அளித்தது தெரியவந்தது. மேலும் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் யார்- யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் இடம் பெற்று இருந்தது.

    இந்த விவகாரத்தை தி.மு.க. சட்டசபையில் கிளப்பியது. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

    வழக்கு தொடர்பான ஆவணங்களையும் சேகரித்தது. அதில் குட்கா ஊழலில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் இடம் பெற்று இருந்தன.

    இதற்கிடையே குட்கா ஊழலில் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் கூறப்படுவதால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது.

    இதையடுத்து வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே குட்கா ஊழலில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

    வழக்கு தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடிதம் எழுதினர். ஆனால் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து விட்டதாகவும், தங்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் லஞ்ச ஒழிப்பு துறை மறுத்துவிட்டது.

    இதுபற்றி மாநில லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் ஒரு விசாரணை அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்பு 2-வது விசாரணை அமைப்புக்கு அனுப்பி வைக்க தேவையில்லை என்றனர்.

    இதை மறுத்த மத்திய விசாரணை அதிகாரிகள் அதுபோன்ற விதிகளோ, தகவல் பரிமாற்ற வழிமுறைகளோ எதுவும் கிடையாது என்றனர்.  #GutkaScam
    Next Story
    ×