search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்த மாணவி அரசு ஜீப் மோதி பலி
    X

    மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்த மாணவி அரசு ஜீப் மோதி பலி

    நாகர்கோவிலில் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய போது நேர்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்த மாணவி, அரசு ஜீப் மோதியதில் பரிதாபமாக இறந்தாள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய போது நேர்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்த மாணவி, அரசு ஜீப் மோதியதில் பரிதாபமாக இறந்தாள். அவளுடைய தம்பி உள்பட 2 பேரும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    நாகர்கோவில் மேலப்புத்தேரியை சேர்ந்தவர் நாகராஜன். நாகர்கோவிலில் உள்ள புத்தக கடை ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகள் ஜெயசெண்பகா (வயது 12), மகன் சஞ்சய் வர்ஷன்(7).

    ஜெய செண்பகா நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 6-வது வகுப்பும், அதேப்பள்ளியில் சஞ்சய் வர்ஷன் 1-வது வகுப்பும் படித்தனர்.

    பள்ளிக்கூடம் முடிந்ததும் நாகராஜனின் பிள்ளைகள் இருவரையும் அவரின் உறவினர் சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். நேற்றும் சுரேஷ்குமார் சென்று ஜெய செண்பகாவையும், சஞ்சய் வர்ஷனையும் மோட்டார்சைக்கிளில் அழைத்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    வெட்டூர்ணிமடத்தில் சாலை திருப்பம் அருகே வந்தபோது அவருக்கு முன்னால் சென்ற மோட்டார்சைக்கிள் திடீரென திரும்பியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பாராத சுரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.

    இதனால் சுரேஷ்குமார், சிறுமி ஜெயசெண்பகா உள்பட 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அவர்களுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அரசு ஜீப் ஒன்று ஜெயசெண்பகா மீது ஏறி இறங்கியது. இதே போல் சுரேஷ்குமாரும், சிறுவன் சஞ்சய் வர்ஷனும் சாலையில் விழுந்ததில் பலத்த காயம் அடைந்து கிடந்தனர்.

    உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஜெயசெண்பகாவின் நிலைமை மோசமானதை தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக அவளை திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயசெண்பகா பரிதாபமாக இறந்தாள். மற்ற 2 பேருக்கும் நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து கோட்டார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×