search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆடிப்பட்டம் விதைக்க வயல்களில் பூஜை செய்து வழிபட்ட விவசாயிகள்
    X

    ஆடிப்பட்டம் விதைக்க வயல்களில் பூஜை செய்து வழிபட்ட விவசாயிகள்

    மேட்டூர் அணையில் இருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறக்கப்படுவதால் திருச்சி மாவட்டத்தில் சம்பா சாகுப்படிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆடிப்பட்டம் விதைக்க வயல்களில் பூஜை செய்து வழிபட்டனர்.
    திருச்சி:

    கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடியை தாண்டி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணை நீர்மட்டம் 95 அடியை தாண்டிவிட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நாளை மறுநாள் (19-ந்தேதி) காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதை தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த அனைவரும் வரவேற்றுள்ளனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மேட்டூர் அணையை இப்போது திறப்பதால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் என்று கூற முடியாது. முதலமைச்சர் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

    காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் 700 ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி வைத்து சம்பா சாகுபடிக்கு பயன்படுத்த முடியும் என்று விவசாயிகள் கூறியுள்ளார்கள். அதேநேரத்தில் வெள்ள காலங்களில் காவிரி நீர் கடலில் சென்று வீணாவதை தடுக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டுவதை தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை சுமார் 140 கிலோ மீட்டர் காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் போது பெரும் வெள்ள காலங்களில் தடுப்பணைகளால் வெள்ளம் ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்புவதாலும் பருவ மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாலும் நம்பிக்கையோடு சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகிறார்கள். தற்போது உள்ள குறுவை சாகுபடி முடிவடைந்ததும் ஆகஸ்டு முதல் வாரத்தில் சம்பா சாகுபடி தொடங்கிவிடும்.

    சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெறும். இதற்காக சி.ஆர். 1009, சி.ஆர். 1009 சப்-1, ஏ.டி.டி.49 போன்ற நெல் ரகங்கள் மற்றும் சாகுபடிக்கு தேவையான டி.ஏ.பி., யூரியா, காம்ளக்ஸ், பொட்டாஸ் போன்ற உரங்கள் தயாரான நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாததால் சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான சாகுபடி குறைந்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. நெல் விளைச்சல் குறைந்ததால் அரிசி விலையும் கிலோ ரூ.50 தாண்டி விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும், அரிசி விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவசாயிகள் இந்த மகிழ்ச்சியை ஆடி 1 தினமான இன்று ஆடிப்பட்டம் விதைக்க விளை நிலங்களில் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். ஆடிப்பட்டத்தின் போது விவசாயிகள் தங்கள் புஞ்சை விளை நிலங்களுக்கு சென்று அங்கு பழம், பச்சரிசி, கம்பு, எள் போன்ற பொருட்களை வைத்து சூடம் ஏற்றி மாடுகளுடன் பூஜை செய்து நல்லேறு விட்டனர்.

    ஆடிப்பட்டத்தில் வரகு, கம்பு, சோளம் மற்றும் பைத்தம் பருப்பு, துவரம் பருப்பு, எள் மற்றும் ஆமணக்கு போன்ற பருப்பு, எண்ணை வித்துக்களையும் விதைப்பார்கள். ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் பயிர்களை கொண்டு ஐப்பசி மாதம் நடைபெறும் தீபாவளியின் போது கம்பை அரைத்து அதிரசம், வரகு, அரிசியை அரைத்து முறுக்கு என தீபாவளி பண்டங்கள் செய்வார்கள்.

    தை பட்டத்தில் தொடங்கும் சம்பா சாகுபடி ஜனவரி மாதம் முடிந்ததும் பொங்கல் கொண்டாடி விவசாயிகள் மகிழ்வார்கள். புஞ்சை நிலத்தில் நடைபெறும் ஆடிப்பட்டம், நஞ்சை நிலத்தில் தொடங்கும் தைப்பட்டமும் சிறப்பாக அமைய உள்ளதால் நீண்ட காலத்திற்கு பிறகு விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் உள்ள வடகரை, தென்கரை, கட்டளை மேட்டுவாய்க்கால், அய்யன் வாய்க்கால், புதுகட்டளை வாய்க்கால் மாநகரில் உள்ள உய்யக்கொண்டான், கத்தரி, கோட்டை வாய்க்கால் உள்ளிட்ட 17 வாய்க்கால்களை தூர் வாரி சீரமைக்க வேண்டும். திறக்கும் நீரை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் செய்ய கடன் உதவி வழங்குவதோடு, பழைய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.

    அதேபோன்று திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் 100 சதவீதம் முழுமையாக குறைபாடின்றி நடத்துவதில் அதிகாரிகள் அக்கரை செலுத்த வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×