search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூரில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
    X

    கரூரில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

    கரூரில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலை, படத்திற்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    கரூர்:

    பெருந்தலைவர், கர்மவீரர், ஏழைபங்காளர், கருப்பு வைரம், தமிழக கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட படிக்காத மேதை என எல்லோராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று கரூரில் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த தினத்தை கரூர் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கருதி மாணவ- மாணவிகளுக்கு கருத்துரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில் கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதன் தலைமை ஆசிரியை சண்முக வடிவு தலைமையில் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோர் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர், தமிழக முதல்- அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை காமராஜர் வகித்தாலும் பொதுவாழ்வில் நேர்மையையும், எளிமையையும் கடைபிடித்து அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்து நடத்தப்பட்ட பேச்சுபோட்டியில் காமராஜர் பற்றி பல்வேறு சுவாரசியமான தகவல்களை மாணவிகள் பேசினர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அந்த பள்ளியின் பிளஸ்-2 மாணவி லட்சுமி பிரபா கல்வியில் மட்டும் அல்லாமல் விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறமையை வெளிப்படுத்தியதால் அவருக்கு அரசு சார்பில் காமராஜ் விருது வழங்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் போது அந்த மாணவிக்கு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து கூறி பாராட்டினர். இதேபோல் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள தெருக்களிலும் ஆங்காங்கே பொதுமக்கள் சார்பில் காமராஜரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதையும் பார்க்க முடிந்தது.

    இதற்கிடையே கரூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் ஸ்டீபன் பாபு தலைமையில் சுரேகா பாலசந்தர், குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் கரூர் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் நாடார் குழும தலைவர் நாடார் பைனான்ஸ் கூடலரசன், மாநில இணைச்செயலாளர் ஜீவிதா ஸ்டோர் சண்முக நாதன், மாவட்ட செயலாளர் நஞ்சை சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கரூர் மாவட்ட நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் அகஸ்டின் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். கரூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் பி.எம்.குப்புசாமி தலைமையில் அரசியல் உயர்மட்டக்குழு தலைவர் முன்னாள் எம்.பி. நாட்ராயன் உள்ளிட்டோர் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கரூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
    Next Story
    ×