search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூரில் பைக் விபத்தில் வாலிபர் பலி- அரசு ஆஸ்பத்திரி கண்ணாடியை அடித்து நொறுக்கி கும்பல் ரகளை
    X

    ஆம்பூரில் பைக் விபத்தில் வாலிபர் பலி- அரசு ஆஸ்பத்திரி கண்ணாடியை அடித்து நொறுக்கி கும்பல் ரகளை

    ஆம்பூரில் பைக் விபத்தில் சிக்கிய வாலிபருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் இறந்துவிட்டதாக கூறி அரசு ஆஸ்பத்திரி கண்ணாடியை நண்பர்கள் அடித்து நொறுக்கினர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் ஆலாங்குப்பம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் கிஷான்குமார் (வயது 20). பெயிண்டர். இவர், நேற்றிரவு 10 மணியளவில் ஆம்பூரில் இருந்து வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது தடுமாறி தடுப்புச்சுவர் மீது பைக் மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கிஷான்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கிஷான்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். தகவலறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த கிஷான்குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர்.

    டாக்டர்கள் காலம் தாழ்த்தி சிகிச்சை அளித்ததால் தான் கிஷான்குமார் இறந்ததாக நண்பர்கள் சிலர் நினைத்து ஆஸ்பத்திரி கண்ணாடியை அடித்து நொறுக்கி ரகளை செய்தனர்.

    இதுப்பற்றி ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் ரகளையில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடி விட்டது.

    ஆஸ்பத்திரியில் கண்ணாடி உடைத்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இச்சம்பவத்தால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆம்பூரில் வாலிபர்கள் ரேசில் கலந்து கொள்வது போல் பைக்கை அதிவேகமாக ஓட்டி செல்வதால் அடிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கேற்ப பைக்கை ஜிக் ஜாக் (பாம்பை போல நெளிவது) செய்தும், பைக் ஸ்டாண்டை சாலையில் உரசி தீப்பொறி பறக்கவிட்டும் செல்வதால் வாகன ஓட்டிகள் எரிச்சலடைகின்றனர்.

    விபத்துகள் ஏற்பட்டு அதிக உயிரிழப்பும் நிகழ்கின்றன.எனவே, அதிவேகமாக பைக்குகளை ஓட்டி செல்லும் வாலிபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விபத்துகளை கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். tamilnews
    Next Story
    ×