search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களை உடனே பணிக்கு திரும்ப உத்தரவு- ஸ்டெர்லைட் நிர்வாகம்
    X

    ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களை உடனே பணிக்கு திரும்ப உத்தரவு- ஸ்டெர்லைட் நிர்வாகம்

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு 45 நாட்களுக்கு பின்னர் ஊழியர்களுக்கு ஆலை நிர்வாகம் அவசர அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ThoothukudiProtest #sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது கடந்த மே மாதம் 22-ந்தேதி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடி சீல் வைத்தது. ஆலையை நிரந்தரமாக மூடவும் அரசு நடவடிக்கை எடுத்தது.

    ஆலையில் இருக்கும் அமிலங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே ஆலை மூடப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கேட்டு பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனு கொடுத்துள்ளது.

    மேலும் ஒப்பந்ததாரர்களும் ஆலையை திறக்க‌ வலியுறுத்தி மனுக்கள் கொடுத்து வருகின்ற‌னர். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க தனி இணையதளத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியது.

    ஸ்டெர்லைட் ஆலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பிற மாவட்டத்தினர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என 2 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் பலரும் குடியிருப்பை காலி செய்து சென்றுவிட்டனர். உள்ளூர் ஊழியர்கள் மாற்றுப்பணிக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளனர். மும்பை, பெங்களூரில் இருந்து பணியாற்றியவர்கள் தூத்துக்குடியில் இருந்து ஊருக்கு சென்றுவிட்டார்கள்.



    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களை இன்று உடனே பணிக்கு திரும்புமாறு ஆலை நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. ஆலையில் வந்து ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்யவும் நிர்வாகத்தினர் அறிவுறித்தி உள்ளனர். ஆலையில் இருந்து வாகனங்கள் மூலமாக ஊழியர்களை அழைத்துவரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    அனைத்து ஊழியர்களையும் ஆலை குடியிருப்பு பகுதிக்கு வருமாறு கூறினர். இதையடுத்து ஆலைக்கு பல்வேறு பகுதியில் உள்ள ஊழியர்கள் இன்று காலை வர தொடங்கினர். ஆலை வாகனங்கள் மூலமாகவும் ஊழியர்கள் அழைத்து வரப்பட்டார்கள். ஆலை குடியிருப்பு பகுதிக்கு வந்த அவர்களிடம் ஊழியர்களின் வருகை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆலையை மீண்டும் இயக்கச்செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று ஆலையை திறக்க வலியுறுத்தி மனு கொடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஆலை மூடப்பட்டு 45 நாட்களுக்கு பின்னர் ஊழியர்களுக்கு ஆலை நிர்வாகம் அவசர அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். #ThoothukudiProtest #sterlite
    Next Story
    ×