search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமராஜர் சிலை அருகே காங்கிரஸ் - பா.ஜனதா தொண்டர்கள் மோதல்
    X

    காமராஜர் சிலை அருகே காங்கிரஸ் - பா.ஜனதா தொண்டர்கள் மோதல்

    சேலத்தில் காமராஜர் சிலை அருகே பா.ஜனதா கட்சியின் கொடி கட்டப்பட்டிருந்ததால், காங்கிரஸ்-பா.ஜனதா கட்சி தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
    சேலம்:

    சேலம் டவுன் 2-வது அக்ரஹாரம் தெருவில் பெருந்தலைவர் காமராஜர் சிலை உள்ளது. நேற்று காமராஜரின் பிறந்தநாள் என்பதால் அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அக்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக காமராஜர் சிலை அருகே பா.ஜனதா கட்சியின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மேலும் கட்சி தொண்டர்களும் மத்திய மந்திரியை வரவேற்க காத்திருந்தனர்.

    இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் கட்சி தொண்டர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அங்கு வந்தனர். அப்போது, சிலை அருகே பா.ஜனதா கொடிகள் கட்டப்பட்டிருந்ததை கண்ட காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே எந்த கட்சி கொடியும் இல்லாத சமயத்தில் பா.ஜனதா கொடி மட்டும் எப்படி கட்டலாம்? என்றும், அதை உடனடியாக அவிழ்க்கவில்லை என்றால் நாங்களே அவிழ்த்து விடுவோம் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். அதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்து கொண்டிருப்பதாகவும், அவர் வந்துவிட்டு சென்றபிறகு கொடியை அப்புறப்படுத்திவிடுவதாக பா.ஜனதாவினர் கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், சிலை அருகே கட்டப்பட்டிருந்த பா.ஜனதா கட்சி கொடியை அவிழ்க்க முயன்றனர்.

    இதை பார்த்த பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர், காங்கிரஸ்-பா.ஜனதா தொண்டர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கொடி கம்புகளால் அடித்து மோதிக்கொண்டனர். மேலும், கூட்டத்துக்குள் சிலர் கற்களையும் வீசி தாக்கினர்.

    அந்த சமயத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென பெரிய கல்லை எடுத்து காமராஜர் சிலை மீது வீசினார். ஆனால் அந்த கல் சிலை மீது படாமல் சிலையின் பீடத்தில் விழுந்தது. இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் இரு கட்சி தொண்டர்களையும் தடுத்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து பயங்கர மோதலில் ஈடுபட்டனர்.

    அப்போது, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காரில் அங்கு வந்தார். பின்னர், அவரது முன்னிலையிலும் காங்கிரஸ்-பா.ஜனதா கட்சி தொண்டர்கள் ஒருவரை ஒருவர் அடித்து மோதிக்கொண்டனர். பிறகு பா.ஜனதா தொண்டர்கள் அமைதியாக இருக்குமாறும், கட்சி கொடியை அவிழ்த்து வேறு இடத்தில் கட்டுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து சிலை அருகே கட்டப்பட்டிருந்த பா.ஜனதா கொடிகள் அவிழ்த்து வேறு இடத்தில் கட்டப்பட்டன. இருப்பினும், மத்திய மந்திரியுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் களை போலீசார் சமாதானம் செய்தனர்.

    இந்த மோதல் சம்பவத்தில் பா.ஜனதா சூரமங்கலம் மண்டல தலைவர் ரமேஷ் படுகாயம் அடைந்தார். மேலும், காங்கிரஸ் தொண்டர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காமராஜர் சிலைக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து மோதலில் படுகாயம் அடைந்த பா.ஜனதா நிர்வாகி ரமேஷ், அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பா.ஜனதா-காங்கிரஸ் தொண்டர்கள் மோதல் சம்பவத்தால் காமராஜர் சிலை அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    Next Story
    ×