search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா தலைவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க அ.தி.மு.க.வும் தயார்- அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
    X

    பா.ஜனதா தலைவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க அ.தி.மு.க.வும் தயார்- அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

    தேவையற்ற குற்றச்சாட்டுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால், பா.ஜனதா தலைவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க அ.தி.மு.க. தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Minister #jayakumar #ADMK
    சென்னை:

    காமராஜர் பிறந்த தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம், “காமராஜரின் புகழ் நிலைக்க வேண்டும், என்றும் தழைத்தோங்க வேண்டும் என்ற வகையில் அவருக்கு புகழ் மாலை சூட்டும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது” என்றார். அதைத் தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- சென்னை விமான நிலையத்தை காமராஜர் விமான நிலையமாக தமிழக அரசு இன்னும் பிரபலப்படுத்தவில்லை என்றும், அவரது பெயரை மிகவும் சிறிய அளவில் போடப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறதே?

    பதில்:- இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே உரிய நேரத்தில் காமராஜரின் புகழ் போற்றி பாதுகாக்கப்படும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

    கேள்வி:- ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை ஆணையம் சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறதா?

    பதில்:- ஜெயலலிதா மரணம் குறித்த முரண்பாடுகள் களையப்பட்டு, நாட்டு மக்களுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் எந்த நோக்கத்துக்காக போடப்பட்டதோ? அந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் அது சென்று கொண்டு இருக்கிறது. அதில் இருந்து எந்த மாறுதலும் இல்லை.

    கேள்வி:- முட்டை விவகாரத்தில் தமிழக மக்களை மொட்டை அடித்துவிட்டார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?



    பதில்:- தமிழகத்தில் 58 லட்சம் மாணவர்கள் முட்டை சாப்பிடுகிறார்கள். முட்டை நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்தது குறித்து வருமான வரித்துறை சோதனை செய்கிறார்கள் என்றால், அதற்கு முட்டை கொள்முதலில் ஊழல் என்று எப்படி சொல்ல முடியும்? எனவே இதில் எந்த விதமான உண்மையும் இல்லை. தேவையில்லாமல் இது போன்ற குற்றச்சாட்டை மாநில அரசு மீது சுமத்துவது மத்தியில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. எனவே இதோடு அவர்கள் பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தார்கள் என்றால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.

    கேள்வி:- மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வில் மீன்களில் ‘பார்மலின்’ கலந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- இந்த பிரச்சினை வந்த உடன், எல்லா இடங்களிலும் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. எங்கேயும் அது போன்று ரசாயனம் கலக்கப்படவில்லை. ஆனால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் மீன்களில் வேண்டுமானால் இருக்கலாம். தமிழகத்தில் பிடிக்கப்படும் மீன்களில் அதுபோன்று ரசாயனம் கலக்கப்படுவதில்லை. 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. தைரியமாக மீன் சாப்பிடலாம். நான் ஏற்கனவே கூறியது போன்று யார் வேண்டுமானாலும் மாதிரி எடுத்து சோதனை செய்து பாருங்கள். ரசாயன கலப்பு இருப்பது தெரியவந்தால் அதற்கு நான் விருது வழங்க தயாராக இருக்கிறேன். தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம்.

    கேள்வி:- தமிழக அரசு ஊழல் நிறைந்த அரசு என்று பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்களே?

    பதில்:- இது போன்ற விமர்சனங்களை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க. ஒரு பெரிய இயக்கம். இந்த இயக்கம் மறைந்த முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். என்ன கொள்கைகள், லட்சியங்கள் வகுத்து கொடுத்தனரோ! அந்த பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. எனவே அப்படி இருக்கின்ற நிலையில், வேண்டும் என்றே அரசியல் உள்நோக்கத்தோடு, இது போன்ற குற்றச்சாட்டுகளை தேவையில்லாமல் சொன்னால், அதற்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார். #Minister #jayakumar #ADMK
    Next Story
    ×