search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைக்க கட்சிகள் தீவிரம் - சென்னை வருகிறார் சோனியா
    X

    பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைக்க கட்சிகள் தீவிரம் - சென்னை வருகிறார் சோனியா

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மாநில கட்சிகளை எப்படியாவது தங்களுடன் கூட்டணி அமைப்பதில் தேசிய கட்சிகள் தீவிரமாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா அடுத்த மாதம் சென்னை வருகிறார்.
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) தேர்தர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் தேர்தல் தேதி அட்டவணை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் அறிவிப்பு வெளியாக 7 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். ஆனால் எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் துடிக்கிறார்கள்.

    இந்த நிலையில் பா.ஜனதா தலைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரசார பணியை தொடங்கிவிட்டனர். இதைத் தொடர்ந்து பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் மாநில அளவில் வலுவாக உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டன.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா ‘தமிழகத்தில் பா.ஜனதா வலுவான கூட்டணியை அமைக்கும். செப்டம்பர் மாதம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்’ என்று அறிவித்தார்.


    தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகளுக்கு மிகப்பெரிய செல்வாக்கு எதுவும் இல்லாததால் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளை முன்னிலைப்படுத்தியே கூட்டணிகள் அமையும். அந்த கூட்டணிகளே வெற்றி வாய்ப்பையும் பெறும்.

    தற்போது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் சமீபகாலமாக இரு கட்சிகளுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை. டெல்லி தலைவர்கள் எடுக்கும் முடிவு ஒருவிதமாக இருக்கிறது. தமிழக நிர்வாகிகள் எடுக்கும் முடிவு இன்னொரு விதமாக இருக்கிறது.

    தமிழக காங்கிரசில் அ.தி.மு.க. உறவை விரும்பும் தலைவர்களும் உண்டு. தி.மு.க. உறவை விரும்பும் தலைவர்களும் உண்டு. இந்த தலைவர்கள் அவர்கள் விரும்பும் கட்சியுடனேயே கூட்டணி அமைய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

    இந்நிலையில் அரசியல் களத்தில் இறங்கி இருக்கும் கமல்ஹாசன் டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தது புது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


    காங்கிரஸ், கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் கைகோர்த்து புதிய அணியாக பாராளுமன்ற தேர்தலில் இறங்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

    இது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் நெருடலை அதிகப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அ.தி.மு.க.வை எந்தப்பக்கமும் திரும்ப முடியாதபடி மத்திய பா.ஜனதா அரசு கிடுக்கிப்பிடி போட்டு வைத்துள்ளது.

    அமித்ஷா ‘வலுவான கூட்டணி அமைப்போம்’ என்று சொல்லியிருப்பது அ.தி.மு.க.வை மனதில் வைத்துதான் என்றே கூறப்படுகிறது.

    இதுபற்றி பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் கூறும் போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதில் தப்பில்லை. எங்களை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளும் ஒரே மாதிரிதான். இரு கட்சிகளுமே எங்களோடு கூட்டணி வைத்த கட்சிகள்தான். எங்கள் கூட்டணியில் இருந்தபோது அந்த கட்சிகள் ஊழலில் ஈடுபடவில்லை. சேரும் இடத்தை பொறுத்து தான் செயல்பாடுகள் இருக்கும். எனவே ஊழல் பெரிய பிரச்சினை இல்லை’ என்றார்.

    இதன்மூலம் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி உருவாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே காங்கிரசுடனான கூட்டணியை உறுதிப்படுத்துவதில் தி.மு.க.வும் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதற்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) சென்னையில் தி.மு.க. நடத்த இருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டை தக்க தளமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து இருக்கிறது.

    ஏற்கனவே அகில இந்திய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.


    தேசிய அளவில் மோடிக்கு எதிராக அணி சேரும் கட்சிகளுடன் இணைய தி.மு.க.வும் ஆர்வமாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த அணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.

    எனவே தி.மு.க. நடத்தும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து தலைவர்களையும் அழைத்துள்ளனர்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் துணையுடன் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைத்துள்ளது. குமாரசாமி பதவி ஏற்பு விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செல்வதாக இருந்தது. ஆனால் தூத்துக்குடி சம்பவம் காரணமாக அவர் செல்லவில்லை. எனவே மாநில சுயாட்சி மாநாட்டில் அவரையும் அழைத்து கவுரவிக்க முடிவு செய்துள்ளார்கள்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா ஆகியோரை டெல்லியில் திருச்சி சிவா நேரில் சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்.


    தி.மு.க. ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டுக்கு சோனியா வருகிறார். அவருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது தனி மரியாதை உண்டு. தனது உடல்நிலை காரணமாக சோனியாவும் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். இருவரும் சந்தித்து பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.

    தனது சென்னை வருகையின்போது கருணாநிதியை சந்திக்கவும், கூட்டணி தொடர்வதற்கான அடித்தளத்தை அமைத்து கொடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

    மேலும் சோனியாவின் வருகையால் காங்கிரசுடனான கூட்டணியை உறுதிப்படுத்த முடியும் என்று தி.மு.க. நம்புகிறது.

    இனி, கூட்டணிகள் அமைப்பதற்கான காட்சி அமைப்புகள் தீவிரம் ஆகும். #ParliamentElection #Congress SoniaGandhi
    Next Story
    ×