search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    நாகர்கோவிலில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

    நாகர்கோவிலில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    திருவனந்தபுரம் வெள்ளையம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் அச்சு ஆர்.சந்திரன் (வயது 28). இவர் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சந்திப்பில் இருந்து வெட்டூர்ணிமடம் செல்லும் சாலை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, தங்கியிருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார்.

    வழக்கமாக காலை 8.45 மணிக்கு வீட்டில் இருந்து வங்கிக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால் நேற்று காலை 9.30 மணிக்கு மேல் ஆகியும் அவர் வங்கிக்கு வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டாலும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

    இதனால் வங்கி ஊழியர்கள் அவருடைய வீட்டுக்கு சென்று அக்கம், பக்கத்தினர் உதவியோடு பார்த்தனர். கதவு அடைக்கப்பட்டு இருந்தது. வெளியில் இருந்து கதவை தட்டிப்பார்த்தும் எந்த பதிலும் உள்ளே இருந்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அச்சு சந்திரன் பிணமாக தொங்கினார்.

    உடனே போலீசார் அவருடைய உடலை இறக்கி, பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உறவினர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வந்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட அச்சு சந்திரன் கடந்த ஓராண்டாக நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றினார். அதற்கு முன்பாக மேலாளர் பயிற்சியை அவர் நாகர்கோவிலிலேயே மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

    குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? காதல் பிரச்சினை ஏதாவது இருந்ததா? வேலைப்பளு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பின்னர், வங்கி மேலாளர் அச்சு சந்திரன் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அவரது உடல் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். 
    Next Story
    ×