search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுங்கள் - பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை
    X

    காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுங்கள் - பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததினத்தை, பள்ளிகளில் நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். #Kamarajar #KamarajarBirthDay
    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாட்டில் கல்விக்கண் திறந்தவர் என்று கல்வியாளர்களால் மட்டும் அல்லாது அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவரது பிறந்தநாள் ஆகும்.

    2006-ம் ஆண்டு முதல் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பள்ளிகளில் காமராஜர் உருவப்படம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். காமராஜர் பற்றி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த வருடம் காமராஜர் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இதனால் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுமா, கொண்டாடப்படாதா என்ற குழப்பம் நிலவியது.

    இந்தநிலையில் விடுமுறை நாள் என்றாலும்கூட, காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், தனியார் பள்ளி முதல்வர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

    அதில் கூறி இருப்பதாவது:-



    காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15-ந்தேதி (நாளை) வருகிறது. இந்த நாளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், முதல்வர்களும் அன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடவேண்டும். இது தொடர்பாக நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும். சிறந்த பள்ளிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு அந்த பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதி ஏற்படுத்த பரிசு தொகை வழங்கிட பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.56 லட்சமும், தொடக்க கல்வித்துறைக்கு ரூ.24 லட்சமும் ஆக மொத்தம் ரூ.80 லட்சத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சில தலைமை ஆசிரியர்களிடம் பேசுகையில் அவர்கள், “கண்டிப்பாக காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுவோம். அவரது உருவப்படத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்துவோம். இனிப்புகள் வழங்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கூடம் அருகே உள்ள மாணவர்கள் வருவார்கள். நிறைய மாணவ, மாணவிகள் வருகிற பள்ளிகளில் காமராஜர் பற்றிய பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்படும். மாணவர்கள் ஒருவேளை வராமல் போனால் திங்கட்கிழமை அனைத்து போட்டிகளும் நடத்தப்படும். உறுதியாக ஞாயிற்றுக்கிழமை காமராஜர் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்படும்” என தெரிவித்தனர். #Kamarajar #KamarajarBirthDay

    Next Story
    ×