search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னை போலி பகுத்தறிவுவாதி என்று கூறுவதா? தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கமல்ஹாசன் கண்டனம்
    X

    என்னை போலி பகுத்தறிவுவாதி என்று கூறுவதா? தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கமல்ஹாசன் கண்டனம்

    “என்னை போலி பகுத்தறிவுவாதி என்று கூற என்ன உரிமை இருக்கிறது” என்று தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து உள்ளார். #KamalHassan #TamilisaiSoundararajan
    ஆலந்தூர்:    

    கமல்ஹாசன் அமாவாசை நாளில் கட்சியை தொடங்குகிறார், அமாவாசை அன்று கட்சி கொடி தொடங்குகிறார், ஆனால் பகுத்தறிவுவாதி போல போலி வேஷம் போடுகிறார் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.

    இந்நிலையில் இதுகுறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமாவாசை தினத்தில் கொடியேற்றியது பற்றி தமிழிசை சவுந்தரராஜன் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால் என்னை போலி பகுத்தறிவுவாதி என்று சொல்ல அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் பகுத்தறிவாதி தான். மக்கள் நீதி மய்யத்தில் உள்ள அனைவரும் பகுத்தறிவுவாதிகள் என்று கூறமுடியாது. என்னுடைய கட்சியினர் இதுபோன்று ஏற்பாடு செய்திருந்தால் அவர்களை நான் கண்டிக்க கடமைப்பட்டு உள்ளேன்.

    பல்வேறு தரப்பினரும், பல்வேறு மதத்தினரும், பல்வேறு நம்பிக்கை உள்ளவர்களும் மக்கள் நீதி மய்யத்தில் உள்ளனர். என்னுடைய மகள் சுருதி பகுத்தறிவுவாதி என்று சொல்ல முடியாது. நான் அரசியலில் பகுத்தறிவு கொள்கையை பரப்பி மூடநம்பிக்கையை ஒழிக்க மட்டும் வந்திருந்தால் தவறாக இருக்கலாம். ஆனால் நான் ஏழ்மையை ஒழிப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும் தான் வந்திருக்கிறேன். அதற்கு எல்லாருடைய உதவியும் தேவைப்படுகிறது.

    ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று அழைப்பது பழைய கூக்குரல். இது பற்றி வந்த எல்லாருடைய விமர்சனங்களும் சரியானது. இதை தவிர்க்க எல்லா முயற்சிகளையும் நான் எடுப்பேன். இனி இதுபோன்று நிகழாது என்று தொண்டர்கள் சார்பில் வாக்குறுதி தரலாம்.

    ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடத்தக்கூடாது என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் கருத்து.

    சத்துணவில் முட்டை வாங்குவதில் முறைகேடுகள் நடந்தது பற்றி ஓராண்டுக்கு முன்பு சுட்டிகாட்டியபோது அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, பொய்யான குற்றச்சாட்டு, எங்கே நிரூபிக்க சொல்லுங்கள் என்று மார்தட்டியவர்கள் தான் தற்போது அதில் சிக்கி உள்ளனர். மீண்டும் அதை தான் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    இவற்றை ஒழிக்க வேண்டும் என்பது தான் எங்களுக்கு முக்கியமான வேலையாக இருக்கிறது. லோக் ஆயுக்தா மசோதாவில் நிறைய தண்ணீர் தான் இருக்கிறது. அதில் பாலை காணவில்லை. அதில் தண்ணீரை சேர்க்க கூடாது. அது பாலாகவே இருக்க வேண்டும்.

    கோவை கல்லூரியில் பேரிடர் ஒத்திகை பயிற்சி எடுத்த போது தள்ளிவிடப்பட்டதில் மாணவி இறந்தது கண்டிக்கத்தக்கது. அதுபோன்ற பயிற்சியை கல்லூரி நிர்வாகமே செய்திருப்பது ஆபத்தான செயல். கல்லூரி நிறுவனங்களின் மாடி உயர்ந்தால் மட்டும் போதாது. கல்வியின் தரம் உயர வேண்டும்.

    தமிழகத்தில் தாமரை மலரும் என்று பா.ஜ.க.வினர் கூறுவது, எந்த தாமரை என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHassan #TamilisaiSoundararajan
    Next Story
    ×