search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்னி பஸ்களுக்கு போட்டியாக அரசு குளிர்சாதன பஸ்கள்
    X

    ஆம்னி பஸ்களுக்கு போட்டியாக அரசு குளிர்சாதன பஸ்கள்

    ரெயில் பயணிகளை குறி வைத்து ஆம்னி பஸ்கள் எழும்பூரில் இருந்து இயக்குவது போல் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு முதல் கட்டமாக 100 சொகுசு பஸ்கள் வழங்கப்படுகிறது. முதன் முதலாக ஏசி படுக்கை வசதியுடன் அரசு பஸ்கள் தற்போது இயக்கப்படுகிறது. சென்னை-திண்டுக்கல் வழித்தடத்தில் மட்டும் கழிப்பிட வசதியுடன் கூடிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ் விடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து மதுரை, தேனி, போடி, சேலம், கரூர், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு படுக்கை வசதி சொகுசு பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இன்று முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கீழக்கரை ஆகிய பகுதிகளுக்கு ஏசி படுக்கை வசதி பஸ் இயக்கப்படுகிறது. மேலும் சென்னை-பெங்களூர் இடையே படுக்கை வசதி பஸ் இன்று விடப்பட்டது. ஏற்கனவே விடப்பட்ட சொகுசு பஸ்களில் போடி, கரூர் பஸ்களில் கூட்டம் குறைவாக காணப்படுகின்றது. மற்ற வழித்தடங்களில் எல்லா நாட்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் போடி, கரூருக்கு இன்று முதல் எழும்பூரில் இருந்து அரசு விரைவு சொகுசு பஸ் இயக்கப்படுகின்றன. எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு போடிக்கும், 8 மணிக்கு கரூருக்கும் ஏசி படுக்கை வசதி சொகுசு பஸ் புறப்பட்டு செல்கின்றன.

    எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில்கள் புறப்பட்டு செல்வதால் ரெயிலில் இடம் கிடைக்காதவர்கள், தவற விட்டவர்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்கிறார்கள். எழும்பூரில் ரெயில் நிலையம் பகுதியில் ஆம்னி பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கிறது. இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஆம்னி பஸ்கள் சாலையை ஆக்கிரமித்து கொள்வதால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகமும் எழும்பூரை மையமாக வைத்து பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கிழக்கரை உள்ளிட்ட அனைத்து தென் மாவட்ட பகுதிகளுக்கும் எழும்பூரில் இருந்து விரைவில் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

    ரெயில் பயணிகளை குறி வைத்து ஆம்னி பஸ்கள் எழும்பூரில் இருந்து இயக்குவது போல் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறுகையில், ‘‘கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்ட பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும். ஏசி படுக்கை வசதி பஸ்களை மட்டும் எழும்பூரில் இருந்து இயக்குவதற்கு முடிவு செய்துள்ளோம். தலைமை செயலகம், எழிலகம், உள்ளிட்ட அரசு பணிகள் தொடர்பாக வெளியூரில் இருந்து வரகூடியவர்கள் எழும்பூரில் இருந்து தான் பயணத்தை தொடருகிறார்கள்.

    ரெயிலில் இடம் கிடைக்காத பயணிகள் பஸ்கள் மூலம் சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் கோயம்பேடு சென்று அங்கிருந்து பயணத்தை தொடர்வதை காட்டிலும் எழும்பூரில் இருந்து அரசு பஸ்களில் பயணத்தை தொடர இது உதவியாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×