search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவன் முகமது யாசின்.
    X
    மாணவன் முகமது யாசின்.

    சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து எஸ்.பி.யிடம் கொடுத்த அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா

    ஈரோட்டில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து எஸ்.பி.யிடம் கொடுத்த அரசு பள்ளி மாணவனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர் குளம் நந்தவன தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா, ஜவுளி வியாபாரி இவரது 2-வது மகன் முகமது யாசின் (வயது 7).

    சின்னசேமூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம் போல் சிறுவன் முகமது யாசின் பள்ளிக்கு சென்றான்.

    பள்ளியில் பகல் 11 மணியளவில் இடைவெளி சமயத்தில் வெளியே வந்த மாணவன் கண்ணில் ரோட்டில் 500 ரூபாய் கொண்ட பணம் கட்டு கிடந்தது தெரிய வந்தது.

    பணக்கட்டை எடுத்த மாணவன் தனது வகுப்பறைக்கு சென்று தனது ஆசிரியை ஜெயந்தி பாயிடம் ஒப்படைத்தார்.

    “டீச்சர் இந்த பணக்கட்டு ரோட்டில் கிடந்தது. யார் தவறவிட்டு சென்றார்களோ.. தெரியவில்லை” என்று கூறினான்.

    அந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ.50 ஆயிரம் இருந்தது. பிறகு அரசு பள்ளியின் ஏற்பாட்டின்படி மாணவன் முகமது யாசினை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு மாணவன் எஸ்.பி.சக்திகணேசனிடம் “சார் இந்த பணம் கீழே கிடந்தது உரியவரிடம் ஒப்படையுங்கள்” என்று கூறி பணக்கட்டை எஸ்.பி.யிடம் ஒப்படைத்தான்.

     மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று பணத்தை ஒப்படைத்த மாணவர் முகமது யாசினை எஸ்.பி.சக்தி கணேசன் பாராட்டி அவனிடம் பேசிய காட்சி.

    மாணவரின் நேர்மையை கண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வெகுவாக பாராட்டினார். மேலும் மாணவனுக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலேயே பாராட்டு விழாவும் நடத்தினார். அதோடு அல்லாமல் மாணவரின் அண்ணன் முகமது ஜமில் (13) அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறான். அவனையும் எஸ்.பி. அலுவலகத்துக்கு வரவழைத்தார்.

    அண்ணன்-தம்பி இருவருக்கும் சீருடை, புத்தகப்பை மற்றும் ஷூ போன்ற பொருட்களையும் வழங்கி பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.

    மாணவனின் நேர்மையை அவன் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ- மாணவிகள் பாராட்டினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் இன்று மாலைமலர் நிருபரிடம் கூறும்போது, “பள்ளி மாணவனின் நேர்மை எண்ணை வியக்க வைத்தது. மாணவன் ஒப்படைத்த ரூ.50 ஆயிரத்துக்கு உரிமை கோரி ஒருவர் என்னிடம் வந்தார். அவரை இன்று மாலை வரவைத்துள்ளேன்.

    அடையாளம் கேட்டு இது அவரது பணம்தானா? என்று உறுதி செய்யப்பட்ட பிறகு பணத்தை அவரிடம் ஒப்படைப்போம் என்று கூறினார். 
    Next Story
    ×