search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கினால் என்ன?- போலீசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
    X

    தினகரன் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கினால் என்ன?- போலீசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

    தர்மபுரியில் டி.டி.வி. தினகரன் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கினால் என்ன? ஏன் மறுக்கின்றனர்? என்று போலீசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. #TTVDinakaran
    சென்னை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில், பசுமைச்சாலை திட்டம் குறித்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது.

    ஆனால், போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதையடுத்து அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.கே.ராஜேந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘எங்கள் கட்சியின் நிறுவனர் டி.டி.வி.தினகரன் கலந்துகொள்ளும் இந்த பொதுக்கூட்டம் என்பதால், போலீசார் உள்நோக்கத்துடன் அனுமதி வழங்க மறுக்கின்றனர்’ என்று கூறியிருந்தார்.



    இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் மனுதாரர் சார்பில் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் டி.ராஜா, இந்த வழக்கில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்கவேண்டும் என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கினால் என்ன? போலீசார் ஏன் மறுக்கின்றனர்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர் விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். #TTVDinakaran
    Next Story
    ×