search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்மேற்கு பருவ மழையால் பவானிசாகர், பாபநாசம் அணைகளில் நீர்மட்டம் உயர்வு
    X

    தென்மேற்கு பருவ மழையால் பவானிசாகர், பாபநாசம் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

    தென்மேற்கு பருவ மழை கர்நாடகம், கேரள மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளதால் பவானிசாகர், பாபநாசம் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. #SouthwestMonsoon
    சென்னை:

    தென்மேற்கு பருவ மழை கர்நாடகம், கேரள மாநிலங்களில் தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.

    கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டது. அதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கேரளா எல்லையையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, வால்பாறை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள நெல்லை, குமரி மாவட்டங்களிலும் மழை நீடித்து வருகிறது.

    தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. அதனால் அணைகளின் நீர் மட்டம் உயர்கிறது.



    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வந்து மேட்டூர் அணைக்கு செல்கிறது.

    இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று அணையில் 31.36 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் 4.62 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.

    இதே போல் ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணை, திருப்பூரில் உள்ள அமராவதி அணை, முல்லை பெரியாறு, கோவை மாவட்டம் சோலையாறு, பாபநாசம் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் உள்ள அணைகளில் 198.37 டி.எம்.சி. தண்ணீர் தேக்க முடியும். தற்போது தென்மேற்கு மழையால் அணைகளில் மொத்தம் 78.34 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. சுமார் 40 சதவீதம் நிரம்பி இருக்கிறது.

    கடந்த ஆண்டு இதே நாளில் தமிழக அணைகளில் 19.02 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.

    பவானிசாகர் அணைக்கு நேற்று வினாடிக்கு 8 ஆயிரத்து 729 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று 81.50 அடியாக இருந்தது.

    இன்று அதிகாலை நேற்றை விட 2 மடங்காக அதிகரித்து வினாடிக்கு 15 ஆயிரத்து 865 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் அணையின் நீர்மட்டமும் 2 அடி உயர்ந்தது.

    இன்று பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.36 அடியாக உயர்ந்தது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர் மட்டம் 97அடியாக இருந்தது.

    தொடர்ந்து நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வந்ததால் அந்த தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும்தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த 8 ஆயிரம் கனஅடி தண்ணீரும் பவானி ஆற்றில் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. #SouthwestMonsoon #BhavaniSagar #Papanasam
    Next Story
    ×