search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் மாநகரில் 37 ரவுடிகள் உள்பட 57 பேர் கைது - போலீசார் அதிரடி
    X

    சேலம் மாநகரில் 37 ரவுடிகள் உள்பட 57 பேர் கைது - போலீசார் அதிரடி

    சேலம் மாநகரில் 37 ரவுடிகள் உள்பட 57 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ரவுடிகள் நின்று கொண்டு ரோட்டில் நடந்து செல்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.

    சேலம் மாநகரில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ரவுடிகளை ஒடுக்க வேண்டும் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம், பொதுமக்கள் பல்வேறு புகார்களை அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் ரவுடிகளை பிடிக்க கோரி துணை கமிஷனர்கள் தங்கதுரை, சுப்புலட்சுமி ஆகியோருக்கு உத்தரவிட்டார். அதன்படி துணை கமிஷனர்கள் உத்தரவின் பேரில், அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய தனிக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரவுடிகளை பிடிக்க சேலத்தில் அதிரடி வேட்டையில் இறங்கினர்.

    அதன்படி அன்னதானப்பட்டி போலீசார் நடத்திய வேட்டையில் வள்ளுவர் நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜவகர் (வயது42), மணியனூர் காந்திநகரை சேர்ந்த ஜெரால்டு (27), அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் (44), வைத்தீஸ்வரன் ஆகிய பிரபல ரவுடிகளை கைது செய்தனர். அதேபோன்று கிச்சிபாளையம் போலீசார் நடத்திய சோதனையில் அந்த பகுதியை சேர்ந்த செந்தில், பிரபாகரன், சரவணன், திருநாவுக்கரசு, தமிழ்செல்வன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    அதேபோன்று அஸ்தம்பட்டி போலீசாரின் சோதனையில் அந்த பகுதியை சேர்ந்த மகுடீஸ்வரன் என்பவரை கைது செய்தனர். சூரமங்கலம் போலீசாரின் சோதனையில் புருசோத்தமன், செல்வன் என மாநகர் பகுதி முழுவதும் நடந்த அதிரடி வேட்டையில் 37 ரவுடிகள் உள்பட 57 பேரை போலீசார் கைது செய்தனர். 
    Next Story
    ×