search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் வழக்கின் தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
    X

    நீட் வழக்கின் தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

    நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. #NEET
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம்  சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன்  தலைமையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ.வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடுத்த வழக்கில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரிசெய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். தரம் என்பதை முன்னிறுத்தி திணிக்கப்பட்ட நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகளுக்கான மொழி பெயர்ப்பு அறிவுக்கு பொருத்தமற்றதாகவும், மாணவர்களால் விளங்கிக் கொள்ள முடியாத வகையிலும் இருந்ததை சுட்டிக்காட்டி அந்த வினாக்களுக்கு உரிய 196 மதிப்பெண்கள் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.


    வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டுமெனவும், இந்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இரண்டு வார காலத்திற்குள் புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிட வேண்டுமெனவும், அதுவரையிலும் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இந்த தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறது.

    இந்த தீர்ப்பின் மூலம் அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைத்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இதனால் பலனடையும் மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை உருவாக்கி வாய்ப்பளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துவதோடு, காலம் தாழ்த்தாமல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

    இந்த பிரச்சனையை கட்சியின் கவனத்திற்கு கொண்டு வந்த டெக் பார் ஆல் அமைப்பையும், வழக்குத் தொடுத்த தோழர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., அவர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதை சுட்டிக்காட்டி ஆரம்ப முதலே தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரி வருகிறது. மாணவர்களின் நலனைப் பற்றி கவலைப்படாமல் இதை நடைமுறைப்படுத்தியதின் காரணமாக மாணவர்கள் ஏராளமான குழப்பங்களோடும்,  கடுமையாக மன உளைச்சலுக்கும், பாதிப்புக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். நீட் சில மாணவர்களின் உயிரையும் பறித்திருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்களிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #NEETCase #CPMWelcomesVerdict
    Next Story
    ×