search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு சங்கத் தேர்தல் வழக்கு 23-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    கூட்டுறவு சங்கத் தேர்தல் வழக்கு 23-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு

    கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    சென்னை:

    தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வந்தன. இதில் ஆளும் கட்சியினருடன் சேர்ந்து அரசு அதிகாரிகள் மிகப்பெரிய முறைகேடுகளை செய்கின்றனர்.

    ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை தேர்தல் இல்லாமலேயே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கின்றனர். அதே நேரம், தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சியினரின் மனுக்களை அவர்கள் பரிசீலிப்பதே இல்லை. எனவே, கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதேபோல, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு நடத்தப்படும் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒருசிலரும், கூட்டுறவு சங்கத் தேர்தலை நிறுத்தி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி வேறு சிலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வக்கீல்கள் பலர் எழுந்து, அரசு உள்நோக்கத்துடன் இந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்துகிறது. ஒரு கூட்டுறவு சங்கத்தில் ஆளும் கட்சியை சேர்ந்தவர் வெற்றிப் பெறவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அந்த தேர்தலையே அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர் என்று வாதிட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், அரசு பிளீடர் ராஜகோபாலன் ஆகியோர் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #HighCourt #CooperativeSocietyElection
    Next Story
    ×